திருக்குறள் - குறள் 792

குறள் பால்: பொருட்பால். குறள் இயல்: நட்பியல். அதிகாரம்: நட்பாராய்தல்.


திருக்குறள் - குறள் 792


ஆய்ந்தாய்ந்து கொள்ளாதான் கேண்மை கடைமுறை
தான்சாம் துயரம் தரும்.


கலைஞர் மு.கருணாநிதி உரை:
திரும்பத் திரும்ப ஆராய்ந்து பார்க்காமல் ஏற்படுத்திக் கொள்கிற நட்பு, கடைசியாக ஒருவர் சாவுக்குக் காரணமாகிற அளவுக்குத் துயரத்தை உண்டாக்கி விடும்.

மு.வரதராசனார் உரை:
ஆராய்ந்து ஆராய்ந்து நட்புக் கொள்ளாதவனுடைய நட்பு, இறுதியில் தான் சாவதற்க்குக் காரணமானத் துயரத்தை உண்டாக்கிவிடும்.

சாலமன் பாப்பையா உரை:
ஒருவனது குணத்தையும் குற்றத்தையும் நன்கு எண்ணி நட்புக் கொள்ளாதவனுக்கு, அந்த நட்பு இறுதியில் அவன் சாவதற்கு ஏற்ற துன்பத்தைத் தரும்.

பரிமேலழகர் உரை:
ஆய்ந்து ஆய்ந்து கேண்மை கொள்ளாதான் - குணமும் செய்கையும் நல்லன் என்பது பலகாலும் பலவாற்றானும் ஆராய்ந்து, ஒருவனோடு நட்புக்கொள்ளாதவன்; கடைமுறை தான்சாம் துயரம் தரும் - முடிவில் தான் சாதற்கு ஏதுவாகிய துன்பத்தினைத் தன் மாற்றார் விளைக்க வேண்டாமல் தானே விளைக்கும்.


மணக்குடவர் உரை:
குற்றமும் ஆய்ந்து குணமும் ஆய்ந்து கொள்ளாதான் கொண்ட நட்பு, பிற்காலத்துத் தான் சாதற்கு ஏதுவான துன்பத்தைத் தரும். இஃது ஆராயாமையால் வருங்குற்றங் கூறிற்று.


Translation:
Alliance with the man you have not proved and proved again,
In length of days will give you mortal pain.

Explanation:
The friendship contracted by him who has not made repeated inquiry will in the end grieve (him) to death.

திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்