திருக்குறள் - குறள் 787
குறள் பால்: பொருட்பால். குறள் இயல்: நட்பியல். அதிகாரம்: நட்பு.

திருக்குறள் - குறள் 787
அழிவி னவைநீக்கி ஆறுய்த்து அழிவின்கண்
அல்லல் உழப்பதாம் நட்பு.
கலைஞர் மு.கருணாநிதி உரை:
நண்பனைத் தீயவழி சென்று கெட்டுவிடாமல் தடுத்து, அவனை நல்வழியில் நடக்கச் செய்து, அவனுக்குத் தீங்கு வருங்காலத்தில் அந்தத் தீங்கின் துன்பத்தைப் பகிர்ந்து கொள்வதே உண்மையான நட்பாகும்.
மு.வரதராசனார் உரை:
அழிவைத் தரும் தீமைகளிலிருந்து நீக்கி, நல்ல வழியில் நடக்கச் செய்து, அழிவுவந்த காலத்தில் உடனிருந்து துன்பப்படுவதே நட்பாகும்.
சாலமன் பாப்பையா உரை:
அழிவு தரும் வழிகளில் நண்பன் சென்றால் தடுத்து, நல்ல வழியில் அவனைச் செலுத்தி அவனுக்குக் கேடு வரும் என்றால் அதை அவனுடன் பகிர்வது நட்பு.
பரிமேலழகர் உரை:
அழிவினவை நீக்கி ஆறு உய்த்து - கேட்டினைத்தரும் தீநெறிகளைச் செல்லுங்கால் விலக்கி, ஏனை நன்னெறிகளைச் செல்லாக்காற் செலுத்தி; அழிவின்கண் அல்லல் உழப்பது நட்பாம் - தெய்வத்தால் கேடு வந்துழி அது விலக்கப்படாமையின் அத்துன்பத்தை உடன் அனுபவிப்பதே ஒருவனுக்கு நட்பாவது. (
மணக்குடவர் உரை:
நட்டார்க்கு அழிவு வந்தவிடத்து அவர் துன்பத்தை நீக்கி நல்ல நெறியின்கண் செலுத்தித் தாங்கித் தன்னால் செயலற்ற விடத்து அவரொடு ஒக்கத் தானும் துன்பம் உழப்பது நட்பு.
Translation:
Friendship from ruin saves, in way of virtue keeps;
In troublous time, it weeps with him who weeps.
Explanation:
(True) friendship turns aside from evil (ways) makes (him) walk in the (good) way, and, in case of loss if shares his sorrow (with him).

திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்