திருக்குறள் - குறள் 785
குறள் பால்: பொருட்பால். குறள் இயல்: நட்பியல். அதிகாரம்: நட்பு.

திருக்குறள் - குறள் 785
புணர்ச்சி பழகுதல் வேண்டா உணர்ச்சிதான்
நட்பாங் கிழமை தரும்.
கலைஞர் மு.கருணாநிதி உரை:
இருவருக்கிடையே நட்புரிமை முகிழ்ப்பதற்கு ஏற்கனவே தொடர்பும் பழக்கமும் வேண்டுமென்பதில்லை. இருவரின் ஒத்த மன உணர்வே போதுமானது.
மு.வரதராசனார் உரை:
நட்புச் செய்வதற்குத் தொடர்பும் பழக்கமும் வேண்டியதில்லை, ஒத்த உணர்ச்சியே நட்பு ஏற்படுத்துவதற்கு வேண்டிய உரிமையைக் கொடுக்கும்.
சாலமன் பாப்பையா உரை:
ஒருவனோடு ஒருவன் நட்புக் கொள்வதற்கு அருகருகே இருப்பதோ, நெருங்கிப் பழகுவதோ வேண்டியதில்ல. இருவரது எண்ணமும் ஒத்திருந்தால் அதுவே நட்பு என்னும் தோழமையைக் கொடுக்கும்.
பரிமேலழகர் உரை:
புணர்ச்சி பழகுதல் வேண்டா - ஒருவனோடு ஒருவன் நட்பாதற்குப் புணர்ச்சியும் பழகுதலுமாகிய காரணங்கள் வேண்டுவதில்லை; உணர்ச்சிதான் நட்பாம் கிழமை தரும் - இருவர்க்கும் ஒத்த உணர்ச்சி தானே நட்பாம் உரிமையைக் கொடுக்கும். (புணர்ச்சி: ஒரு தேயத்தராதல். 'இன்றே போல்க நும் புண
மணக்குடவர் உரை:
நட்பாதற்குப் பலநாள் பழகுதல் வேண்டா: ஒருநாள் கண்டாராயினும் உணர்வுடையார்க்கு அவ்வுணர்வுடைமைதானே நட்பாகும் உரிமையைத் தரும். இவ்வுணர்வுடைமைதானே நட்பாகு மென்றவாறு.
Translation:
Not association constant, not affection's token bind;
'Tis the unison of feeling friends unites of kindred mind.
Explanation:
Living together and holding frequent intercourse are not necessary (for friendship); (mutual) understanding can alone create a claim for it.

திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்