திருக்குறள் - குறள் 663

குறள் பால்: பொருட்பால். குறள் இயல்: அமைச்சியல். அதிகாரம்: வினைத்திட்பம்.


திருக்குறள் - குறள் 663


கடைக்கொட்கச் செய்தக்க தாண்மை இடைக்கொட்கின்
எற்றா விழுமந் தரும்.


கலைஞர் மு.கருணாநிதி உரை:
செய்து முடிக்கும் வரையில் ஒரு செயலைப்பற்றி வெளிப்படுத்தாமலிருப்பதே செயலாற்றும் உறுதி எனப்படும். இடையில் வெளியே தெரிந்துவிட்டால் அச்செயலை நிறைவேற்ற முடியாத அளவுக்கு இடையூறு ஏற்படக்கூடும்.

மு.வரதராசனார் உரை:
செய்யும் செயலை முடிவில் வெளிப்படும் படியாக செய்யும் தகுதியே ஆண்மையாகும், இடையில் வெளிபட்டால் நீங்காத துன்பத்தைக் கொடுக்கும்.

சாலமன் பாப்பையா உரை:
ஒரு செயலை முடிவில் வெளிப்படுத்துவதே ஆளுமை, இடையிலேயே வெளிப்படுத்தினால் அது செயலைச் செய்பவனுக்கு நீங்காத துன்பத்தைத் தரும்.

பரிமேலழகர் உரை:
கடைக்கொட்கச் செய்தக்கது ஆண்மை - செய்யப்படும் வினையை முடிவின்கண் புலப்படும் வகை முன்னெல்லாம் மறைத்துச் செய்வதே திட்பமாவது; இடைக்கொட்கின் எற்றா விழுமம் தரும் - அங்ஙனமின்றி இடையே புலப்படுமாயின் அப்புலப்பாடு செய்வானுக்கு நீங்காத இடும்பையைக் கொடுக்கும். (மறைத்


மணக்குடவர் உரை:
ஒரு வினையைத் தொடங்கினால் முடிவிலே சென்று மீளல் செய்வது ஆண்மையாவது; இடையிலே மீள்வானாயின் அது மிகுதியைக் கெடாத நோயைக் கொடுக்கும். சென்று மீளல் சுழல்தல் ஆயிற்று. இது தொடங்கின வினையை முடியச் செய்யவேண்டுமென்றது.

திருக்குறளார் வீ. முனிசாமி உரை:
செய்யப்படும் தொழில்களை முடிந்த பிறகே தெரியுமாறு செய்தல் வேண்டும். இடையில் மறைத்துச் செய்வதே திண்மையாகும். இடையில் தெரிந்து விடுமானால் நீங்காத துன்பத்தினைக் கொடுக்கும்.

Translation:
Man's fitting work is known but by success achieved;
In midst the plan revealed brings ruin ne'er to be retrieved.

Explanation:
So to perform an act as to publish it (only) at its termination is (true) manliness; for to announce it beforehand, will cause irremediable sorrow.

திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்