திருக்குறள் - குறள் 660

குறள் பால்: பொருட்பால். குறள் இயல்: அமைச்சியல். அதிகாரம்: வினைத்தூய்மை.


திருக்குறள் - குறள் 660


சலத்தால் பொருள்செய்தே மார்த்தல் பசுமண்
கலத்துள்நீர் பெய்திரீஇ யற்று.


கலைஞர் மு.கருணாநிதி உரை:
தவறான வழிகளில் பொருளைச் சேர்த்து அதைக் காப்பாற்ற நினைப்பது, பச்சை மண்ணால் செய்யப்பட்ட பாத்திரத்தில் நீரை ஊற்றி, அதைப் பாதுகாக்க நினைப்பதைப் போன்றதுதான்.

மு.வரதராசனார் உரை:
வஞ்சனையான வழியால் பொருளைச்சேர்த்துக் காப்பாற்றுதல், பச்சை மண்கலத்தில் நீரை விட்டு அதைக் காப்பாற்றி வைத்தாற் போன்றது.

சாலமன் பாப்பையா உரை:
தீய செயல்களால் பொருளைத் திரட்டி, அதைக் காப்பது, சுடாத பச்சைமண் பானையில் நீரை ஊற்றி அதைச் சேமிப்பது போலாம்.

பரிமேலழகர் உரை:
சலத்தால் பொருள் செய்து ஏமார்த்தல் - அமைச்சன் தீய வினைகளாற் பொருள் படைத்து, அதனால் அரசனுக்கு ஏமஞ்செய்தல்; பசுமட்கலத்துள் நீர் பெய்து இரீஇயற்று - பசிய மட்கலத்துள்ளே நீரைப் பெய்து அதற்கு ஏமஞ்செய்ததனோடு ஒக்கும். (முன் ஆக்கம் பயப்பன போல் தோன்றிப் பின் அழிவே பய


மணக்குடவர் உரை:
வஞ்சத்தாலே பொருள்தேடி மகிழ்ந்திருத்தல், பசுமட்கலத்திலே நீரை முகந்து வைத்த தன்மைத்து. இது தானும் பொருளுங் கூடிக் கெடு மென்றது.

திருக்குறளார் வீ. முனிசாமி உரை:
தீய தொழில்களால் பொருள் சேர்த்து அதற்குப் பாதுகாப்புச் செய்தல் என்பது, பச்சை மண் பாத்திரத்திற்குள்ளே நீரைப் பெய்து அதனைப் பாதுகாப்பது போலாகும்.

Translation:
In pot of clay unburnt he water pours and would retain,
Who seeks by wrong the realm in wealth and safety to maintain.

Explanation:
(For a minister) to protect (his king) with wealth obtained by foul means is like preserving a vessel of wet clay by filling it with water.

திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்