திருக்குறள் - குறள் 615
குறள் பால்: பொருட்பால். குறள் இயல்: அரசியல். அதிகாரம்: ஆள்வினையுடைமை.

திருக்குறள் - குறள் 615
இன்பம் விழையான் வினைவிழைவான் தன்கேளிர்
துன்பம் துடைத்தூன்றும் தூண்.
கலைஞர் மு.கருணாநிதி உரை:
தன்னலம் விரும்பாமல், தான் மேற்கொண்ட செயலை நிறைவேற்ற விரும்புகின்றவன் தன்னைச் சூழ்ந்துள்ள சுற்றத்தார், நண்பர்கள், நாட்டு மக்கள் ஆகிய அனைவரின் துன்பம் துடைத்து, அவர்களைத் தாங்குகிற தூணாவான்.
மு.வரதராசனார் உரை:
தன் இன்பத்தை விரும்பாதவனாய் மேற்க்கொண்டச் செயலை முடிக்க விரும்புகிறவன், தன் சுற்றத்தாரின் துன்பத்தைப் போக்கித் தாங்குகின்ற தூண் ஆவான்.
சாலமன் பாப்பையா உரை:
இன்பத்தை விரும்பாதவனாய்ச் செயல் செய்வதையே விரும்புபவன், தன் உறவும் நட்புமாகிய பாரத்தின் துன்பத்தைப் போக்கி, அதைத் தாங்கும் தூண் ஆவான்.
பரிமேலழகர் உரை:
இன்பம் விழைவான் வினை விழைவான் - தனக்கு இன்பத்தை விரும்பானாகி வினைமுடித்தலையே விரும்புவான்; தன் கேளிர் துன்பம் துடைத்து ஊன்றும் தூண் - தன் கேளிராகிய பாரத்தின் துன்பத்தினை நீக்கி அதனைத் தாங்கும் தூணாம். (இஃது ஏகதேச உருவகம், 'ஊன்றும்' என்றது அப்பொருட்டாதல்,
மணக்குடவர் உரை:
தன்னுடம்பிற்கு இன்பத்தை விரும்பாது வினை செய்தலை விரும்புமவன் தன் கேளிர்க்கு உற்ற துன்பத்தை நீக்கி அவரைத் தளராமல் தாங்குவதொரு தூணாம். ஆதலால் வருத்தம் பாராது முயலவேண்டு மென்பது.
திருக்குறளார் வீ. முனிசாமி உரை:
தனக்கு இன்பத்தினை விரும்பாதவனாகித் தொழில் முடிப்பதையே விரும்புகிறவன், தன சுற்றத்தாரின் துன்பத்தினை நீக்கிச் சுற்றத்தாராகிய பாரத்தினைத் தாங்கும் தூணாகவும் ஆவான்.
Translation:
Whose heart delighteth not in pleasure, but in action finds delight,
He wipes away his kinsmen's grief and stands the pillar of their might.
Explanation:
He who desires not pleasure, but desires labour, will be a pillar to sustain his relations, wiping away their sorrows.

திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்