திருக்குறள் - குறள் 599

குறள் பால்: பொருட்பால். குறள் இயல்: அரசியல். அதிகாரம்: ஊக்கமுடைமை.


திருக்குறள் - குறள் 599


பரியது கூர்ங்கோட்டது ஆயினும் யானை
வெரூஉம் புலிதாக் குறின்.


கலைஞர் மு.கருணாநிதி உரை:
உருவத்தைவிட ஊக்கமே வலிவானது என்பதற்கு எடுத்துக்காட்டு: கொழுத்த உடம்பும் கூர்மையான கொம்புகளுங்கொண்ட யானை, தன்னைத் தாக்க வரும் புலியைக் கண்டு அஞ்சி நடுங்குவது தான்.

மு.வரதராசனார் உரை:
யானை பருத்த உடம்பை உடையது, கூர்மையானக் கொம்புகளை உடையது, ஆயினும் ஊக்கமுள்ளதாகியப் புலி தாக்கினால் அதற்கு அஞ்சும்.

சாலமன் பாப்பையா உரை:
யானை பெரிய உடம்பையும் கூர்மையான கொம்பினையும் உடையது என்றாலும் புலி தாக்கினால் பயப்படும்.

பரிமேலழகர் உரை:
பரியது கூர்ங்கோட்டது ஆயினும் - எல்லா விலங்கினும் தான் பேருடம்பினது, அதுவேயும் அன்றிக் கூரிய கோட்டையும் உடையது ஆயினும்; யானை புலி தாக்குறின் வெரூஉம் - யானை தன்னைப் புலி எதிர்ப்படின் அதற்கு அஞ்சும்.
(பேருடம்பான் வலி மிகுதி கூறப்பட்டது. புலியின் மிக்க மெய்வலியும் கருவிச் சிறப்பும் உடைத்தாயினும் யானை ஊக்கம் இன்மையான் அஃதுடைய அதற்கு அஞ்சும் என்ற இது, பகைவரின் மிக்க மெய்வலியும் கருவிச் சிறப்பும் உடையராயினும், அரசர் ஊக்கமிலராயின், அஃதுடைய அரசர்க்கு அஞ்சுவ

மணக்குடவர் உரை:
யானை, பெரிய உடம்பினதாய்க் கூரியகோட்டையும் உடைத்தாயினும் புலி பொருமாயின் அஞ்சும். இஃது உள்ளமுடைமை யில்லாதார் பெரியராயினும் கெடுவார் என்றது.

திருக்குறளார் வீ. முனிசாமி உரை:
எல்லா விலங்கினங்களிலும் தானே பெரிய உடம்பினையுடையது அதுவேயன்றி கூரிய கொம்புகளையும் (தந்தங்களையும்) உடையது என்றாலும், அப்படிப்பட்ட யானையானது, ஊக்கம் நிறைந்த சிறிய உருவங்கொண்ட புலி தனக்கு எதிர்ப்பட்டால் அதற்கு அஞ்சும்.

Translation:
Huge bulk of elephant with pointed tusk all armed,
When tiger threatens shrinks away alarmed!.

Explanation:
Although the elephant has a large body, and a sharp tusk, yet it fears the attack of the tiger.

திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்