திருக்குறள் - குறள் 597
குறள் பால்: பொருட்பால். குறள் இயல்: அரசியல். அதிகாரம்: ஊக்கமுடைமை.
திருக்குறள் - குறள் 597
சிதைவிடத்து ஒல்கார் உரவோர் புதையம்பிற்
பட்டுப்பா டூன்றுங் களிறு.
கலைஞர் மு.கருணாநிதி உரை:
உடல் முழுதும் அம்புகளால் துளைக்கப்பட்டாலும் யானையானது உறுதி தளராமல் இருப்பதுபோல, ஊக்கமுடையவர்கள், அழிவே வந்தாலும் அதற்காகக் கவலைப்படமாட்டார்கள்.
மு.வரதராசனார் உரை:
உடம்பை மறைக்குமளவு அம்புகளால் புண்பட்டும் யானைத் தன் பெருமையை நிலைநிறுத்தும், அதுபோல் ஊக்கம் உடையவர் அழிவு வந்தவிடத்திலும் தளர மாட்டார்.
சாலமன் பாப்பையா உரை:
தன்மீது அம்புகள் புதைந்து புண்பட்டபோதும் யானை தளராமல் தன் பெருமையை நிலைநிறுத்தும்; இதுபோல ஊக்கம் உடையவர் தமக்கு கேடு வந்த போதும் ஊக்கம் இழக்கமால் தம் பெருமையை நிலைநிறுத்துவர்.
பரிமேலழகர் உரை:
களிறு புதை அம்பின் பட்டுப்பாடு ஊன்றும் - களிறு புதையாகிய அம்பால் புண்பட்ட இடத்துத் தளராது தன் பெருமையை நிலைநிறுத்தும்; உரவோர் சிதைவிடத்து ஒல்கார் - அதுபோல ஊக்கமுடையார் தாம் கருதிய உயர்ச்சிக்குச் சிதைவுவந்த இடத்துத் தளராது தம் பெருமையை நிலை நிறுத்துவர்.'
(புதை - அம்புக்கட்டு : பன்மை கூறியவாறு. 'பட்டால்' என்பது 'பட்டு' எனத் திரிந்து நின்றது. ஒல்காமை களிற்றுடனும், பாடு ஊன்றுதல் உரவோருடனும் சென்று இயைந்தன. தள்ளினும் தவறாது உள்ளியது முடிப்பர் என்பதாம். இவை மூன்று பாட்டானும் ஊக்கம் உடையாரது உயர்ச்சி கூறப்பட்டத
மணக்குடவர் உரை:
தளர்ச்சி வந்தவிடத்துத் தளரார் உள்ள மிகுதியுடையார்: மெய் புதைந்த அம்பினுட்பட்டும் பாடூன்றும் களிறுபோல. இஃது உயிர்க்கேடு வரினுந் தளரார் என்றது.
திருக்குறளார் வீ. முனிசாமி உரை:
யானையானது புதையாகிய அம்பினால் புண்பட்ட போதும், தளராமல் நின்று தனது பெருமையினை நிலைநிறுத்தும். அதுபோல ஊக்கம் உடையவர்கள், தாம் கருதிய உயர்ச்சிக்குச் சிதைவு வந்த போதும் மனம் தளரமாட்டார்கள், தமது பெருமையினை நிலை நிறுத்துவார்கள்..
Translation:
The men of lofty mind quail not in ruin's fateful hour,
The elephant retains his dignity mind arrows' deadly shower.
Explanation:
The strong minded will not faint, even when all is lost; the elephant stands firm, even when wounded by a shower of arrows.
திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்