திருக்குறள் - குறள் 585

குறள் பால்: பொருட்பால். குறள் இயல்: அரசியல். அதிகாரம்: ஒற்றாடல்.


திருக்குறள் - குறள் 585


கடாஅ உருவொடு கண்ணஞ்சாது யாண்டும்
உகாஅமை வல்லதே ஒற்று.


கலைஞர் மு.கருணாநிதி உரை:
சந்தேகப்பட முடியாத தோற்றத்துடனும் அப்படிச் சந்தேகப்பட்டுப் பார்ப்பவர்களுக்கு அஞ்சாமலும், என்ன நேர்ந்தாலும் மனத்தில் உள்ளதை வெளிப்படுத்தாமலும் உள்ளவர்களே ஒற்றர்களாகப் பணியாற்ற முடியும்.

மு.வரதராசனார் உரை:
ஐயுற முடியாத உருவத்தோடு, பார்த்தவருடைய கண் பார்வைக்கு அஞ்சாமல் எவ்விடத்திலும் மனதிலுள்ளதை வெளிப்படுத்தாமல் இருக்க வல்லவனே ஒற்றன் ஆவன்.

சாலமன் பாப்பையா உரை:
பிறர் சந்தேகப்படாத வேடத்‌தோடு சென்று, சந்தேகப்பட்டுச் சினந்தால் அஞ்சாது நின்று, சாமதானபேத தண்டம் என எந்த உபாயம் செய்தாலும் ரகசியத்தைச் சொல்லாத வல்லமை பெற்றவரே ஒற்றர்.

பரிமேலழகர் உரை:
கடாஅ உருவொடு - ஒற்றப்பட்டார் கண்டால் ஐயுறாத வடிவோடு பொருந்தி; கண் அஞ்சாது - அவர் ஐயுற்று அறியலுறின் செயிர்த்து நோக்கிய அவர் கண்ணிற்கு அஞ்சாது நின்று; யாண்டும் உகாஅமைவல்லதே ஒற்று - நான்கு உபாயமும் செய்தாலும் மனத்துக் கொண்டவற்றை உமிழாமை வல்லனே ஒற்றனாவான்.
('கடா' என்பது 'கடுக்கும்' என்னும் பெயரெச்சத்து எதிர்மறை. ஐயுறாத வடிவாவன பார்ப்பார், வணிகர் முதலாயினார் வடிவு.).

மணக்குடவர் உரை:
வினாவப்படாத வடிவோடேகூடி கண்ணஞ்சுதலும் இன்றி, அறிந்தபொருளை எவ்விடத்தினும் சோர்வின்றியே அடக்கவல்லவன் ஒற்றனாவன்.


Translation:
Of unsuspected mien and all-unfearing eyes,
Who let no secret out, are trusty spies.

Explanation:
A spy is one who is able to assume an appearance which may create no suspicion (in the minds of others), who fears no man's face, and who never reveals (his purpose).

திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்