திருக்குறள் - குறள் 579
குறள் பால்: பொருட்பால். குறள் இயல்: அரசியல். அதிகாரம்: கண்ணோட்டம்.

திருக்குறள் - குறள் 579
ஒறுத்தாற்றும் பண்பினார் கண்ணும்கண் ணோடிப்
பொறுத்தாற்றும் பண்பே தலை.
கலைஞர் மு.கருணாநிதி உரை:
அழிக்க நினைத்திடும் இயல்புடையவரிடத்திலும் பொறுமை காட்டுவது மிக உயர்ந்த பண்பாகும்.
மு.வரதராசனார் உரை:
தண்டித்தற்குரிய தன்மை உடையவரிடத்திலும் கண்ணோட்டம் செய்து ( அவர் செய்த குற்றத்தைப்) பொருத்துக் காக்கும் பண்பே சிறந்தது.
சாலமன் பாப்பையா உரை:
தம்மை வருத்தும் இயல்புடையவரிடத்திலும் கண்ணோட்டம் கொண்டு, அவர்தம் பிழையைப் பொறுக்கும் பண்பே சிறந்தது.
பரிமேலழகர் உரை:
ஒறுத் தாற்றும் பண்பினார் கண்ணும் - தம்மை ஒறுக்கும் இயல்பு உடையார் இடத்தும்; கண்ணோடிப் பொறுத்தாற்றும் பண்பே தலை - கண்ணோட்டம் உடையராய்க் குற்றத்தைப் பொறுக்கும் இயல்பே அரசர்க்குத் தலையாய இயல்பாவது.
('பண்பினார்' என்றதனான், அவர் பயிற்சி பெற்றாம் 'ஒறுத்தாற்றும்', 'பொறுத்தாற்றும்' என்பன ஈண்டு ஒரு சொல் நீர.).
மணக்குடவர் உரை:
தம்மை யொறுத்துச் செய்யும் இயல்புடையார்மாட்டும் கண்ணோடிப் பொறுத்துச் செய்யும் குணமே தலையான குணம்.
திருக்குறளார் வீ. முனிசாமி உரை:
தமக்குத் துன்பம் கொடுக்கும் தன்மையுடையவரிடத்திலும், கண்ணோட்டம் உடையவராகிக் குற்றத்தினைப் பொறுத்துக் கொள்ளும் இயல்பு தலையான பண்பாகும்.
Translation:
To smile on those that vex, with kindly face,
Enduring long, is most excelling grace.
Explanation:
Patiently to bear with, and show kindness to those who grieve us, is the most excellent of all dispositions.

திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்