திருக்குறள் - குறள் 574
குறள் பால்: பொருட்பால். குறள் இயல்: அரசியல். அதிகாரம்: கண்ணோட்டம்.
திருக்குறள் - குறள் 574
உளபோல் முகத்தெவன் செய்யும் அளவினால்
கண்ணோட்டம் இல்லாத கண்.
கலைஞர் மு.கருணாநிதி உரை:
அகத்தில் அன்பையும் இரக்கத்தையும் சுரக்கச் செய்யாத கண்கள் முகத்தில் உள்ளவைபோல் தோன்றுவதைத் தவிர, வேறு எந்தப்பயனும் இல்லாதவைகளாகும்.
மு.வரதராசனார் உரை:
தக்க அளவிற்குக் கண்ணோட்டம் இல்லாத கண்கள் முகத்தில் உள்ளவை போல் தோன்றுதல் அல்லாமல் வேறு என்ன பயன் செய்யும்.
சாலமன் பாப்பையா உரை:
வரம்பிற்கு உட்பட்ட கண்ணோட்டம் இல்லாத கண், முகத்தில் இருப்பது போல் இருக்கிறதே தவிர, அதனால் வேறு என்ன பயன் உண்டு?.
பரிமேலழகர் உரை:
முகத்து உளபோல் எவன் செய்யும் - கண்டார்க்கு, முகத்தின்கண் உளபோலத் தோன்றல் அல்லது வேறு என்ன பயனைச் செய்யும்; அளவினால் கண்ணோட்டம் இல்லாத கண் - அளவிறவாத கண்ணோடுதலை உடைய அல்லாத கண்கள்.
('தோன்றல்', 'அல்லது' என்னும் சொற்கள் அவாய் நிலையான் வந்தன. கழிகண்ணோட்டத்தின் நீக்குதற்கு 'அளவினான்' என்றார். 'ஒரு பயனையும் செய்யா' என்பது குறிப்பெச்சம்.).
மணக்குடவர் உரை:
அவரவர் வாழ்வு காரணமாகக் கண்ணோடுதலைச் செய்யாத கண்கள், முகத்தின்கண் உள்ளனபோன்று இருப்பதன்றி வேறென்ன பயனைச் செய்யும்? . அளவென்றது தகுதியை. இது தனக்கும் பயன்படாதென்றது.
திருக்குறளார் வீ. முனிசாமி உரை:
அளவு மீறாத கண்ணோட்டம் (தாட்சண்யம்) இல்லாத கண்கள், பார்ப்பதற்கு - பார்ப்பவர்களுக்கு - இருப்பதுபோலத் தோன்றுமே அல்லாமல் என்ன பயனைச் செய்யும்?.
Translation:
The seeming eye of face gives no expressive light,
When not with duly meted kindness bright.
Explanation:
Beyond appearing to be in the face, what good do they do, those eyes in which is no well-regulated kindness ?.
திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்