திருக்குறள் - குறள் 550
குறள் பால்: பொருட்பால். குறள் இயல்: அரசியல். அதிகாரம்: செங்கோன்மை.

திருக்குறள் - குறள் 550
கொலையிற் கொடியாரை வேந்தொறுத்தல் பைங்கூழ்
களைகட் டதனொடு நேர்.
கலைஞர் மு.கருணாநிதி உரை:
கொலை முதலிய கொடுமைகள் புரிவோரை, ஓர் அரசு தண்டனைக்குள்ளாக்குவது பயிரின் செழிப்புக்காகக் களை எடுப்பது போன்றதாகும்.
மு.வரதராசனார் உரை:
கொடியவர் சிலரைக் கொலைத்தண்டனையால் அரசன் ஒறுத்தல் பயிரைக் காப்பாற்றக் களையைச் களைவதற்க்கு நிகரான செயலாகும்.
சாலமன் பாப்பையா உரை:
கொடியவர்களுக்கு மரண தண்டனை கொடுத்துத் தக்கவரைக் காப்பது, உழவன் களையைக் களைந்து பயிரைக் காப்பதற்குச் சமம்.
பரிமேலழகர் உரை:
வேந்து கொடியாரைக் கொலையின் ஒறுத்தல் - அரசன் கொடியவர்களைக் கொலையான் ஒறுத்துச் தக்கோரைக் காத்தல், பைங்கூழ் களை கட்டதனொடு நேர் - உழவன் களையைக் களைந்து பைங்கூழைக் காத்ததனோடு ஒக்கும்.
('கொடியவர்' என்றது, தீக்கொளுவுவார், நஞ்சிடுவார், கருவியிற் கொல்வார், கள்வர், ஆறலைப்பார், சூறை கொள்வார், பிறன்இல் விழைவார் என்றிவர் முதலாயினாரை, இவரை வடநூலார் 'ஆததாயிகள்' என்ப. இப்பெற்றியாரைக் கண்ணோடிக் கொல்லாவழிப் புற்களைக்கு அஞ்சாநின்ற பைங்கூழ்போன்று நலி
மணக்குடவர் உரை:
கொடுமை செய்வாரைக் கொலையினானே அரசன் ஒறுத்தல் குற்றமன்று: உழவன் பைங்கூழ் வளர்தற்குக் களை களைந்ததனோடு ஒக்கும். கொடியாராவார் கள்வர், ஆறலைப்பார், சூறைகொள்வார்.
திருக்குறளார் வீ. முனிசாமி உரை:
வேந்தனானவன் கொடியவர்களைக் கொலையினால் தண்டித்துத் தக்கோரைக் காப்பாற்றுதல், உழவன் களையைக் களைந்து பசுமையான பயிரைக் காப்பாற்றுவதோடு ஒக்கும்.
Translation:
By punishment of death the cruel to restrain,
Is as when farmer frees from weeds the tender grain.
Explanation:
For a king to punish criminals with death, is like pulling up the weeds in the green corn.

திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்