திருக்குறள் - குறள் 547

குறள் பால்: பொருட்பால். குறள் இயல்: அரசியல். அதிகாரம்: செங்கோன்மை.


திருக்குறள் - குறள் 547


இறைகாக்கும் வையகம் எல்லாம் அவனை
முறைகாக்கும் முட்டாச் செயின்.


கலைஞர் மு.கருணாநிதி உரை:
நீதி வழுவாமல் ஓர் அரசு நடைபெற்றால் அந்த அரசை அந்த நீதியே காப்பாற்றும்.

மு.வரதராசனார் உரை:
உலகத்தை எல்லாம் அரசன் காப்பாற்றுவான், நீதிமுறை கெடாதவாறு ஆட்சி செய்வானாயின் அரசனை அந்த முறையே காப்பாற்றும்.

சாலமன் பாப்பையா உரை:
ஆட்சியாளர் பூமியைக் காப்பர்; அவரையோ அவரது குறையற்ற நேர்மையான ஆட்சி காக்கும்.

பரிமேலழகர் உரை:
வையகம் எல்லாம் இறை காக்கும் - வையகத்தை எல்லாம் அரசன் காக்கும், அவனை முறை காக்கும் - அவன் தன்னை அவனது செங்கோலே காக்கும், முட்டாச் செயின் - அதனை முட்டு வந்துழியும் முட்டாமல் செலுத்துவனாயின்.
(முட்டாமல் செலுத்தியவாறு: மகனை முறைசெய்தான் கண்ணும்(சிலப் 20:53-55 ) தன் கை குறைத்தான் கண்ணும் (சிலப்,23: 42-53)காண்க. 'முட்டாது' என்பதன் இறுதி நிலை விகாரத்தால் தொக்கது. இவை நான்கு பாட்டானும் அதனைச் செலுத்தினான் எய்தும் பயன் கூறப்பட்டது.).

மணக்குடவர் உரை:
வையகமெல்லாவற்றையும் அரசன் காக்கும்; அவ்வரசனை அவன்றான் செய்யும் முறை காக்கும். அதனைத் தப்பாமல் செய்யின் என்றவாறு. இது தனக்குக் காவலாம் என்றது.

திருக்குறளார் வீ. முனிசாமி உரை:
வையகத்தையெல்லாம் அரசன் காப்பாற்றுவான்; அந்த அரசனை அவனுடைய செங்கோல் காப்பாற்றும்; அதனை அவன் முட்டாமல் செலுத்துவானானால் என்பதாம்.

Translation:
The king all the whole realm of earth protects;
And justice guards the king who right respects.

Explanation:
The king defends the whole world; and justice, when administered without defect, defends the king.

திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்