திருக்குறள் - குறள் 542
குறள் பால்: பொருட்பால். குறள் இயல்: அரசியல். அதிகாரம்: செங்கோன்மை.

திருக்குறள் - குறள் 542
வானோக்கி வாழும் உலகெல்லாம் மன்னவன்
கோல்நோக்கி வாழுங் குடி.
கலைஞர் மு.கருணாநிதி உரை:
உலகில் உள்ள உயிர்கள் வாழ்வதற்கு மழை தேவைப்படுவது போல ஒரு நாட்டின் குடிமக்கள் வாழ்வதற்கு நல்லாட்சி தேவைப்படுகிறது.
மு.வரதராசனார் உரை:
உலகத்தில் உள்ள உயிர்கள் எல்லாம் மழையை நம்பி வாழ்கின்றன, அதுபோல் குடிமக்கள் எல்லாம் அரசனுடைய செங்கோலை நோக்கி வாழ்கின்றனர்.
சாலமன் பாப்பையா உரை:
உயிர்கள் எல்லாம் மழையை எதிர்பார்த்தே வாழும்; குடிமக்களோ ஆளுவோரின் நேர்மையான ஆட்சியை எதிர்பார்த்தே வாழ்வர்.
பரிமேலழகர் உரை:
உலகு எல்லாம் வான் நோக்கி வாழும் - உலகத்து உயிர் எல்லாம் மழை உளதாயின் உளவாகா நிற்குமே எனினும், குடி மன்னவன் கோல் நோக்கி வாழும் - குடிகள் அரசன் செங்கோல் உளதாயின் உளவாகா நிற்கும்.
(நோக்கி வாழ்தல், இன்றியமையாமை. வானின் ஆய உணவை 'வான்' என்றும், கோலின் ஆய ஏமத்தைக் 'கோல்' என்றும் கூறினார். அவ்வேமம் இல்வழி உணவுளதாயினும் குடிகட்கு அதனால் பயனில்லை என்பதாம்.).
மணக்குடவர் உரை:
உலகத்தாரெல்லாம் மழையை நோக்கி யின்புறாநிற்பர்; அதுபோலக் குடிகளும் அரசனது செங்கோன்மையை நோக்கியின்புறாநிற்பர்.
திருக்குறளார் வீ. முனிசாமி உரை:
உலகத்திலுள்ள உயிர்கள் எல்லாம் மழையை நோக்கி வாழும். குடிமக்கள் அரசனுடைய செங்கோலினை நோக்கி வாழ்வார்கள்.
Translation:
All earth looks up to heav'n whence raindrops fall;
All subjects look to king that ruleth all.
Explanation:
When there is rain, the living creation thrives; and so when the king rules justly, his subjects thrive.

திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்