திருக்குறள் - குறள் 539

குறள் பால்: பொருட்பால். குறள் இயல்: அரசியல். அதிகாரம்: பொச்சாவாமை.


திருக்குறள் - குறள் 539


இகழ்ச்சியின் கெட்டாரை உள்ளுக தாந்தம்
மகிழ்ச்சியின் மைந்துறும் போழ்து.


கலைஞர் மு.கருணாநிதி உரை:
மமதையால் பூரித்துப்போய்க் கடமைகளை மறந்திருப்பவர்கள், அப்படி மறந்துபோய் அழிந்து போனவர்களை நினைத்துப் பார்த்துத் திருந்திக் கொள்ள வேண்டும்.

மு.வரதராசனார் உரை:
தாம் தம் மகிழ்ச்சியால் செருக்குக் கொண்டு கடமையை மறந்திருக்கும் போது, அவ்வாறு சோர்ந்திருந்த காரணத்தால் முற்காலத்தில் அழிந்தவரை நினைக்க வேண்டும்.

சாலமன் பாப்பையா உரை:
தம் மகிழ்ச்சியில் மனவலிமை பெறும்பொழுது எல்லாம் முற்காலத்தில் மகிழ்ச்சியால் மறதி கொண்டு அழிந்தவர்களை நினைவிற் கொள்க.

பரிமேலழகர் உரை:
தம் மகிழ்ச்சியின் தாம் மைந்து உறும் போழ்து - அரசர் தம் மகிழ்ச்சிக்கண் தாம் வலியுறும் பொழுது, இகழ்ச்சியின் கெட்டாரை உள்ளுக - முற்காலத்து அதனினாய சோர்வால் கெட்டவர்களை நினைக்க.
(காரணங்களோடு அவர்க்கு உளதாய உரிமையை மகிழ்ச்சிமேல் ஏற்றித் தம் மகிழ்ச்சியின் என்றும், இகழ்ச்சியும் கேடும் உடன் தோன்றும் ஆகலின், 'மகிழ்ச்சியின் மைந்துறும் போழ்து' என்றும் கூறினார். கெட்டாரை உளவே, 'நாமும் அவ்வாறே கெடுதும்' என்று அதன்கண் மைந்துறார் என்பது கரு

மணக்குடவர் உரை:
அரசர் குறித்துணரும் உணர்ச்சியின்மையாலே முன்பு கெட்ட அரசரை நினைக்க; தாமும் தம்முடைய மகிழ்ச்சியாலே வலியராயிருக்கும் பொழுது. இஃது உண்பவை, உடுப்பவை, பூசுபவை சோதித்துக் கொள்க என்றது.

திருக்குறளார் வீ. முனிசாமி உரை:
மன்னர்கள் தமது செருக்கில் களிப்புற்றிருக்கும்போது, முற்காலத்தில் அப்படிப்பட்ட குணத்தினால் உண்டான மறதியால் கெட்டவர்களை நினைத்துப் பார்க்கவேண்டும்.

Translation:
Think on the men whom scornful mind hath brought to nought,
When exultation overwhelms thy wildered thought.

Explanation:
Let (a king) think of those who have been ruined by neglect, when his mind is elated with joy.

திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்