திருக்குறள் - குறள் 513

குறள் பால்: பொருட்பால். குறள் இயல்: அரசியல். அதிகாரம்: தெரிந்துவினையாடல்.


திருக்குறள் - குறள் 513


அன்பறிவு தேற்றம் அவாவின்மை இந்நான்கும்
நன்குடையான் கட்டே தெளிவு.


கலைஞர் மு.கருணாநிதி உரை:
அன்பு, அறிவு, செயலாற்றும் திறமை, பேராசைப் படாத குணம் ஆகிய நான்கு பண்புகளையும் நிலையாகப் பெற்றிருப்பவரைத் தேர்வு செய்வதே நலம்.

மு.வரதராசனார் உரை:
அன்பு, அறிவு, ஐயமில்லாமல் தெளியும் ஆற்றல், அவா இல்லாமை ஆகிய இந் நான்கு பண்புகளையும் நிலையாக உடையவனைத் தெளியலாம்.

சாலமன் பாப்பையா உரை:
நிர்வாகத்தின்மேல் அன்பு, நிர்வாகத்திற்கு நன்மை தருவதை அறியும் அறிவு, அதற்கான செயல்களைச் செய்யும்போது உறுதி, பணியில் பொருள் வந்தால் அதன்மீது ஆசை இன்மை இந்த நான்கையும் உடையவனிடத்தே பதவி தருவதுதான் தெளிவு.

பரிமேலழகர் உரை:
அன்பு - அரசன் மாட்டு அன்பும், அறிவு - அவனுக்கு ஆவன அறியும் அறிவும், தேற்றம் - அவை செய்தற்கண் கலங்காமையும், அவா இன்மை - அவற்றால் பொருள் கையுற்ற வழி அதன்மேல் அவா இன்மையும் ஆகிய, இந்நான்கும் நன்கு உடையான்கட்டே தெளிவு - இந்நான்கு குணங்களையும் நிலைபெற உடையான்
(இந்நான்கும் நன்குடைமை இவன் செய்கின்ற வினைக்கண் யாதும்ஆராய வேண்டுவதில்லை என்று அரசன் தெளிவதற்கு ஏதுஆகலின், அவனை, அதன் பிறப்பிடனாக்கிக் கூறினார். இவைமூன்று பாட்டானும் ஆடற்குரியானது இலக்கணம் கூறப்பட்டது.).

மணக்குடவர் உரை:
அன்புடைமையும் அறிவுடைமையும் ஒருபொருளை ஆராய்ந்து துணிவுடைமையும் அவாவின்மையுமென்னும் இந்நான்கு குணங்களையும் நிலை பெற உடையான் மேலதே வினையை விட்டிருக்கும் தெளிவு.

திருக்குறளார் வீ. முனிசாமி உரை:
அன்பும் அறிவும் கலங்காத தெளிவும் ஆசையில்லாமையும் ஆகிய இந்த நான்கும் நல்லபடியாக உடையவனிடத்தில் தொழிலினை விட்டிருப்பதே தெளிவாகும்.

Translation:
A loyal love with wisdom, clearness, mind from avarice free;
Who hath these four good gifts should ever trusted be.

Explanation:
Let the choice (of a king) fall upon him who largely possesses these four things, love, knowledge, a clear mind and freedom from covetousness.

திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்