திருக்குறள் - குறள் 491

குறள் பால்: பொருட்பால். குறள் இயல்: அரசியல். அதிகாரம்: இடனறிதல்.


திருக்குறள் - குறள் 491


தொடங்கற்க எவ்வினையும் எள்ளற்க முற்றும்
இடங்கண்ட பின்அல் லது.


கலைஞர் மு.கருணாநிதி உரை:
ஈடுபடும் செயல் ஒன்றும் பெரிதல்ல என இகழ்ச்சியாகக் கருதாமல், முற்றிலும் சரியான இடத்தைத் தேர்ந்தெடுத்து அச்செயலில் இறங்க வேண்டும்.

மு.வரதராசனார் உரை:
முற்றுகை செய்வதற்கு ஏற்ற இடத்தைக் கண்டபின் அல்லாமல் எச் செயலையும் தொடங்கக்கூடாது, பகைவரை இகழவும் கூடாது.

சாலமன் பாப்பையா உரை:
பகைவரை வளைத்து வெல்லும் இடத்தைக் காணும் முன் எந்தச் செயலையும் தொடங்க வேண்டா; பகைவரை அற்பர் என்று இகழவும் வேண்டா.

பரிமேலழகர் உரை:
முற்றும் இடம் கண்ட பின்அல்லது - பகைவரை முற்றுதற்கு ஆவதோர் இடம் பெற்றபின் அல்லது, எவ்வினையும் தொடங்கற்க - அவர்மாட்டு யாதொரு வினையையும் தொடங்காதொழிக, எள்ளற்க - அவரைச் சிறியர் என்று இகழாதொழிக.
(முற்றுதல்: வளைத்தல். அதற்கு ஆம் இடமாவது: வாயில்களானும் நூழைகளானும் அவர் புகலொடு போக்கு ஒழியும் வகை அரணினைச் சூழ்ந்து. ஒன்றற்கு ஒன்று துணையாய்த் தம்முள் நலிவில்லாத பலபடை இருப்பிற்கும், மதிலும் அகழும் முதலிய அரண் செய்யப்பட்ட அரசிருப்பிற்கும் ஏற்ற, நிலக்கிட

மணக்குடவர் உரை:
முடியுமிடங் கண்டாலல்லது யாதொரு வினையுந் தொடங்கா தொழிக; எளிதென்றிகழாதொழிக. இஃது இடமறிதல் வேண்டுமென்பது கூறிற்று.

திருக்குறளார் வீ. முனிசாமி உரை:
பகைவரை முற்றுகை இடுவதற்கு ஏற்ற இடம் பெற்றபின் அல்லாமல் அவர் மீது யாதொரு தொழிலினையும் தொடங்காதிருத்தல் வேண்டும். அப்பகைவரைச் சிறியர் என்று இகழாதிருத்தல் வேண்டும்.

Translation:
Begin no work of war, depise no foe,
Till place where you can wholly circumvent you know.

Explanation:
Let not (a king) despise (an enemy), nor undertake any thing (against him), until he has obtained (a suitable) place for besieging him.

திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்