திருக்குறள் - குறள் 476

குறள் பால்: பொருட்பால். குறள் இயல்: அரசியல். அதிகாரம்: வலியறிதல்.


திருக்குறள் - குறள் 476


நுனிக்கொம்பர் ஏறினார் அஃதிறந் தூக்கின்
உயிர்க்கிறுதி ஆகி விடும்.


கலைஞர் மு.கருணாநிதி உரை:
தன்னைப்பற்றி அதிகமாகக் கணக்குப் போட்டுக் கொண்டு, எல்லை மீறிப் போகிற ஒருவர், நுனிக் கிளையில் ஏறியவர் அதற்கு மேலும் ஏறிட முயற்சி செய்தால் என்ன ஆவாரோ அந்தக் கதிக்கு ஆளாவார்.

மு.வரதராசனார் உரை:
ஒரு மரத்தின் நுனிக்கொம்பில் ஏறியவர், அதையும் கடந்து மேலே ஏற முனைந்தால், அவருடைய உயிர்க்கு முடிவாக நேர்ந்துவிடும்.

சாலமன் பாப்பையா உரை:
ஒரு மரக்கிளையின் நுனியில் ஏறிவிட்டவர், அந்த அளவையும் கடந்து மேலும் ஏற முயன்றால், அம் முயற்சியே அவர் உயிருக்கு முடிவாகிவிடும்.

பரிமேலழகர் உரை:
கொம்பர் நுனி ஏறினார் அஃது இறந்து ஊக்கின் - ஒருமரக்கோட்டினது நுனிக்கண்ணே ஏறி நின்றார், தம் ஊக்கத்தால் அவ்வளவினகை¢ கடந்து மேலும் ஏற ஊக்குவாராயின்; உயிர்க்கு இறுதி ஆகிவிடும் - அவ்வூக்கம் அவர் உயிர்க்கு இறுதியாய் முடியும்.
('நுனிக்கொம்பர்' என்பது கடைக்கண் என்பதுபோலப் பின் முன்னாகத் தொக்க ஆறாம் வேற்றுமைத்தொகை. பன்மை அறிவின்மைபற்றி இழித்தற்கண் வந்தது. இறுதிக்கு ஏது ஆவதனை 'இறுதி' என்றார். 'பகைமேற் செல்வான் தொடங்கித் தன்னால் செல்லலாமளவும் சென்று நின்றான், பின் அவ்வளவின் நில்லாத

மணக்குடவர் உரை:
ஒரு மரத்தின் நுனிக்கொம்பேறினவர் தம்மள வறிந்து வைத்துப் பின்னும் மேலேறுவாராயின் அஃது அவர்தம்முயிர்க்கு இறுதியாகிவிடும். இஃது அரசன் தன்னாற் செல்லலாமெல்லையளவும் சென்றால் பின்பு மீள வேண்டுமென்றது. இதுவும் ஒரு வலியறிதல்.


Translation:
Who daring climbs, and would himself upraise
Beyond the branch's tip, with life the forfeit pays.

Explanation:
There will be an end to the life of him who, having climbed out to the end of a branch, ventures to go further.

திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்