திருக்குறள் - குறள் 452
- குறள் பால்:
- பொருட்பால்
- குறள் இயல்:
- அரசியல்
- அதிகாரம்:
- சிற்றினஞ்சேராமை
நிலத்தியல்பால் நீர்திரிந் தற்றாகும் மாந்தர்க்கு
இனத்தியல்ப தாகும் அறிவு.
திருக்குறள் - குறள் 452 உரை
கலைஞர் மு.கருணாநிதி உரை
சேர்ந்த நிலத்தின் தன்மையால் நீரானது வேறுபட்டு அந்த நிலத்தின் தன்மையை அடைந்துவிடும் அதுபோல மக்களின் அறிவும், தாங்கள் சேர்ந்த இனத்தின் தன்மையைப் பெற்றதாகிவிடும்.
மு.வரதராசனார் உரை
சேர்ந்த நிலத்தின் இயல்பால் அந்த நீர் வேறுபட்டு அந் நிலத்தின் தன்மையுடையதாகும், அதுபோல் மக்களுடைய அறிவு இனத்தின் இயல்பினை உடையதாகும்.
சாலமன் பாப்பையா உரை
தான் சேர்ந்த நிலத்தின் தன்மையால் நீர் தன் இயல்பை இழந்து, நிலத்தின் இயல்பாகவே மாறிவிடும்; மனிதரின் அறிவும் அவர் சேர்ந்த இனத்தின் இயல்பாகவே ஆகிவிடும்.
பரிமேலழகர் உரை
நிலத்து இயல்பான் நீர் திரிந்து அற்றாகும் - தான் சேர்ந்த நிலத்தினது இயல்பானே நீர் தன் தன்மை திரிந்து அந்நிலத்தின் தன்மைத்தாம், மாந்தர்க்கு இனத்து இயல்பு அறிவு (திரிந்து) அதாகும் -அதுபோல மாந்தர்க்குத் தாம் சேர்ந்த இனத்தின் இயல்பானே அறிவும் தன் தன்மை திரிந்த
(எடுத்துக்காட்டுவமை: விசும்பின்கண் தன் தன்மைத்தாய நீர் நிலத்தோடு சேர்ந்த வழி, நிறம், சுவை முதலிய பண்புகள் திரிந்தாற்போல, தனி நிலைக்கண் தன் தன்மைத்தாய அறிவு, பிறஇனத்தோடு சேர்ந்தவழிக் காட்சி முதலிய தொழில்கள் திரியும் என, இதனான் அதனது காரணங் கூறப்பட்டது.) .
மணக்குடவர் உரை
நிலத்தின் தன்மையால் நீர் தன் தன்மை வேறுபட்டு அந்நிலத்தின் தன்மைத்தாவது போல, மக்கட்கு அறிவு இனத்தின் தன்மையதாய் வேறுபடும்.
திருக்குறளார் வீ. முனிசாமி உரை
நீரானது, தான் சேர்ந்த நிலத்தினாலே மாறுபட்டு அந்த நிலத்தின் தன்மையதாகிவிடும். அதுபோல, மனிதர்க்கு அறிவானது தாம் சேர்ந்த இனத்தினாலே வேறுபட்டு அந்த இனத்தின் தன்மையதாகிவிடும்.
Translation
The waters' virtues change with soil through which they flow;
As man's companionship so will his wisdom show.
Explanation
As water changes (its nature), from the nature of the soil (in which it flows), so will the character of men resemble that of their associates.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this kural.
✍ மதிப்பிடுங்கள் · Rate and review
அதிகாரம் 46: சிற்றினஞ்சேராமை
குறள் 451 சிற்றினம் அஞ்சும் பெருமை சிறுமைதான் சுற்றமாச் சூழ்ந்து விடும்.
குறள் 453 மனத்தானாம் மாந்தர்க் குணர்ச்சி இனத்தானாம் இன்னான் எனப்படுஞ் சொல்.
குறள் 454 மனத்து ளதுபோலக் காட்டி ஒருவற்கு இனத்துள தாகும் அறிவு.
குறள் 455 மனந்தூய்மை செய்வினை தூய்மை இரண்டும் இனந்தூய்மை தூவா வரும்.
குறள் 456 மனந்தூயார்க் கெச்சம்நன் றாகும் இனந்தூயார்க்கு இல்லைநன் றாகா வினை.
குறள் 457 மனநலம் மன்னுயிர்க் காக்கம் இனநலம் எல்லாப் புகழும் தரும்.
குறள் 458 மனநலம் நன்குடைய ராயினும் சான்றோர்க்கு இனநலம் ஏமாப் புடைத்து.
குறள் 459 மனநலத்தின் ஆகும் மறுமைமற் றஃதும் இனநலத்தின் ஏமாப் புடைத்து.
குறள் 460 நல்லினத்தி னூங்குந் துணையில்லை தீயினத்தின் அல்லற் படுப்பதூஉம் இல்.