திருக்குறள் - குறள் 421

குறள் பால்: பொருட்பால். குறள் இயல்: அரசியல். அதிகாரம்: அறிவுடைமை.


திருக்குறள் - குறள் 421


அறிவற்றங் காக்குங் கருவி செறுவார்க்கும்
உள்ளழிக்க லாகா அரண்.


கலைஞர் மு.கருணாநிதி உரை:
பகையால் அழிவு வாராமல் பாதுகாக்கும் அரண், அறிவு ஒன்றுதான்.

மு.வரதராசனார் உரை:
அறிவு அழிவு வராமல் காக்கும் கருவியாகும், அன்றியும் பகைகொண்டு எதிர்ப்பவர்க்கும் அழிக்க முடியாத உள்ளரணும் ஆகும்.

சாலமன் பாப்பையா உரை:
அறிவு நமக்கு அழிவு வராமல் காக்கும் ஆயுதம், பகைவராலும் அழிக்க முடியாத உட்கோட்டை.

பரிமேலழகர் உரை:
அறிவு அற்றம் காக்கும் கருவி - அரசர்க்கு அறிவு என்பது இறுதி வாராமல் காக்கும் கருவியாம், செறுவார்க்கு அழிக்கலாகா உள் அரணும் - அதுவேயுமன்றிப் பகைவர்க்கும் அழிக்கலாகாத உள்ளரணும் ஆம்.
(காத்தல் - முன் அறிந்து பரிகரித்தல், உள்ளரண் - உள்ளாய அரண், உள்புக்கு அழிக்கலாகா அரண் என்றும் ஆம். இதனால், அறிவினது சிறப்புக் கூறப்பட்டது.).

மணக்குடவர் உரை:
ஒருவனுக்குக் குற்றமறைக்குங் கருவியாவது அறிவு: பகைவராலும் உட்புகுந்து அழிக்கலாகா அரணும் அதுதானே. இது தனக்குள்ள குற்றத்தை மறைக்கு மென்றும் பிறரால் வருந்தீமையைக் காக்குமென்றும் அறிவினாலாம் பயன் கூறிற்று.

திருக்குறளார் வீ. முனிசாமி உரை:
அறிவு என்பது இறுதி வாராமல் காப்பாற்றுகின்ற கருவியாகும். பகைவர்களாலும் அழிக்க முடியாத உள்ளிருப்பதாகிய காவலிடமென்னும் கோட்டையாகும்.

Translation:
True wisdom wards off woes, A circling fortress high;
Its inner strength man's eager foes Unshaken will defy.

Explanation:
Wisdom is a weapon to ward off destruction; it is an inner fortress which enemies cannot destroy.

திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்