திருக்குறள் - குறள் 399
குறள் பால்: பொருட்பால். குறள் இயல்: அரசியல். அதிகாரம்: கல்வி.

திருக்குறள் - குறள் 399
தாமின் புறுவது உலகின் புறக்கண்டு
காமுறுவர் கற்றறிந் தார்.
கலைஞர் மு.கருணாநிதி உரை:
தமக்கு இன்பம் தருகின்ற கல்வியறிவு உலகத்தாருக்கும் இன்பம் தருவதைக் கண்டு, அறிஞர்கள் மேலும் மேலும் பலவற்றைக் கற்றிட விரும்புவார்கள்.
மு.வரதராசனார் உரை:
தாம் இன்புறுவதற்குக் காரணமான கல்வியால் உலகமும் இன்புறுவதைக் கண்டு, கற்றறிந்த அறிஞர் மேன்மேலும் (அக் கல்வியையே) விரும்புவர்.
சாலமன் பாப்பையா உரை:
தம் மனத்தை மகிழ்விக்கும் கல்வியினால் உலகம் மகிழ்வதைக் கண்டு கற்று அறிந்தவர்கள் மேலும் கற்கவே விரும்புவார்கள்.
பரிமேலழகர் உரை:
தாம் இன்புறுவது உலகு இன்புறக் கண்டு - தாம் இன்புறுதற்கு ஏதுவாகிய கல்விக்கு உலகம் இன்புறுதலால் அச்சிறப்பு நோக்கி, கற்றறிந்தார் காமுறுவர் - கற்றறிந்தார் பின்னும் அதனையே விரும்புவர்.
(தாம் இன்புறுதலானது, நிகழ்வின் கண் சொற்பொருள்களின் சுவை நுகர்வானும், புகழ் பொருள் பூசை பெறுதலானும், எதிர்வின்கண் அறம் வீடு பயத்தலானும், அதனான் இடையறாத இன்பம் எய்துதல். உலகு இன்புறுதலாவது: 'இம்மிக்காரோடு தலைப்பெய்து அறியாதன எல்லாம் அறியப்பெற்றோம்' என்றும்
மணக்குடவர் உரை:
தாம் இனிதாக நுகர்வதொன்றை உலகத்தார் நுகர்ந்து இன்புறுவாராகக் கண்டால் அதற்கு இன்புறுவர் கற்றறிந்தவர். இஃது அழுக்காறு செய்யாது இன்புறுதல் அறமாதலின் அது கல்வியானே வருமென்றது.
திருக்குறளார் வீ. முனிசாமி உரை:
தாங்கள் இன்பமடைவதற்குக் காரணமான கல்விக்கு உலகமானது இன்பமடைவதைக் கண்டறிந்த கற்றறிந்தவர் பின்னும் அக்கல்வியினையே பெரிதும் விரும்புவர்.
Translation:
Their joy is joy of all the world, they see; thus more
The learners learn to love their cherished lore.
Explanation:
The learned will long (for more learning), when they see that while it gives pleasure to themselves, the world also derives pleasure from it.

திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்