திருக்குறள் - குறள் 385
குறள் பால்: பொருட்பால். குறள் இயல்: அரசியல். அதிகாரம்: இறைமாட்சி.
திருக்குறள் - குறள் 385
இயற்றலும் ஈட்டலுங் காத்தலும் காத்த
வகுத்தலும் வல்ல தரசு.
கலைஞர் மு.கருணாநிதி உரை:
முறையாக நிதி ஆதாரங்களை வகுத்து, அரசாங்கக் கருவூலத்திற்கான வருவாயைப் பெருக்கி, அதைப் பாதுக்காத்துத் திட்டமிட்டுச் செலவிடுவதுதான் திறமையான நல்லாட்சிக்கு இலக்கணமாகும்.
மு.வரதராசனார் உரை:
பொருள் வரும் வழிகளை மேன்மேலும் இயற்றலும் வந்த பொருள்களைச் சேர்த்தலும், காத்தலும் காத்தவற்றை வகுத்துச் செலவு செய்தலும் வல்லவன் அரசன்.
சாலமன் பாப்பையா உரை:
பொருள் வரும் வழிகளை உருவாக்குவது வந்த பொருள்களைத் தொகுப்பது, தொகுத்தவற்றைப் பிறர்கவராமல் காப்பது, காத்தவற்றை அறம், பொருள், இன்பம் நோக்கிச் செலவிடுவது என்னும் இவற்றில் திறமை மிக்கதே அரசு.
பரிமேலழகர் உரை:
இயற்றலும் - தனக்குப் பொருள்கள் வரும் வழிகளை மேன்மேல் உளவாக்கலும், ஈட்டலும் - அங்ஙனம் வந்தவற்றை ஒருவழித் தொகுத்தலும், காத்தலும் - தொகுத்தவற்றைப் பிறர் கொள்ளாமல் காத்தலும், காத்த வகுத்தலும் - காத்தவற்றை அறம், பொருள், இன்பங்களின் பொருட்டு விடுத்தலும், வல்லது
(ஈட்டல், காத்தல் என்றவற்றிற்கு ஏற்ப, இயற்றல்என்பதற்குச் செயப்படுபொருள் வருவிக்கப்பட்டது. பொருள்களாவன:மணி, பொன், நெல் முதலாயின. அவை வரும் வழிகளாவன : பகைவரை அழித்தலும் , திறை கோடலும் , தன் நாடு தலையளித்தலும் முதலாயின. பிறர் என்றது பகைவர், கள்வர், சுற்றத்தார
மணக்குடவர் உரை:
பொருள் வரும்வழி யியற்றலும் அதனை அழியாம லீட்டலும் அதனைச் சோர்வுபடாமற் காத்தலும் காத்த அதனை வேண்டுவனவற்றிற்குப் பகுத்தலும் வல்லவன் அரசனாவான். பகுத்தல்- யானை குதிரை முதலிய படைக்குக் கொடுத்து அவையிற்றையுண்டாக்குதல். இது பண்டாரங் கூறுமாறு கூறிற்று.
திருக்குறளார் வீ. முனிசாமி உரை:
பொருள்வரும் வழிகளை மேன்மேல் உண்டாக்கலும், வந்தவற்றைத் தொகுத்தலும், காப்பாற்றுதலும், காப்பாற்றியதைத் தக்கபடி வகுத்துச் செலவிடுதலும் ஆகியவற்றில் வல்லவனே அரசன்.
Translation:
A king is he who treasure gains, stores up, defends,
And duly for his kingdom's weal expends.
Explanation:
He is a king who is able to acquire (wealth), to lay it up, to guard, and to distribute it.
திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்