திருக்குறள் - குறள் 180

குறள் பால்: அறத்துப்பால். குறள் இயல்: இல்லறவியல். அதிகாரம்: வெஃகாமை.


திருக்குறள் - குறள் 180


இறலீனும் எண்ணாது வெஃகின் விறல்ஈனும்
வேண்டாமை என்னுஞ் செருக்கு.


கலைஞர் மு.கருணாநிதி உரை:
விளைவுகளைப் பற்றி நினைக்காமல் பிறர் பொருளைக் கவர்ந்துகொள்ள விரும்பினால் அழிவும், அத்தகைய விருப்பம் கொள்ளாதிருந்தால் வாழ்க்கையில் வெற்றியும் கிட்டும்.

மு.வரதராசனார் உரை:
வி‌ளைவை எண்ணாமல் பிறர் பொருளை விரும்பினால் அஃது அழிவைத் தரும்; அப்பொருளை விரும்பாமல் வாழும் பெருமை வெற்றியைத் தரும்.

சாலமன் பாப்பையா உரை:
பின் வி‌ளைவை எண்ணாமல் அடுத்தவர் பொருளை விரும்பிக் கவர்ந்தால், அது நமக்கு அழிவைக் கொடுக்கும்; அதற்கு ஆசைப்படாத செல்வமோ வெற்றியைக் கொடுக்கும்‌.

பரிமேலழகர் உரை:
எண்ணாது வெஃகின் இறல் ஈனும் - பின் விளைவது அறியாது ஒருவன் பிறன் பொருளை வௌவக் கருதின், அக்கருத்து அவனுக்கு இறுதியைப் பயக்கும்; வேண்டாமை என்னும் செருக்கு விறல் ஈனும் - அப்பொருளை வேண்டாமை என்னும் செல்வம் வெற்றியைப் பயக்கும். [பகையும் பாவமும் பெருக்கலின் 'இறல்


மணக்குடவர் உரை:
விசாரியாதே பிறர் பொருளை விரும்புவானாயின் அது கேட்டைத் தரும். அதனை வேண்டாமையாகிய பெருமிதம் ஆக்கத்தைத்தரும். இஃது உயிர்க்குக் கேடு தருமென்றது.

திருக்குறளார் வீ. முனிசாமி உரை:
பின்னர் விளைவது அறியாமல் வெஃகுதல் செய்தால் அவனுக்கு முடிவினை உண்டாக்கும்; வேண்டாமை என்கின்ற செல்வத்தன்மையானது வெற்றியினைக் கொடுக்கும்.

Translation:
From thoughtless lust of other's goods springs fatal ill,
Greatness of soul that covets not shall triumph still.

Explanation:
To covet (the wealth of another) regardless of consequences will bring destruction. That greatness (of mind) which covets not will give victory.

திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்