திருக்குறள் - குறள் 1198
குறள் பால்: காமத்துப்பால். குறள் இயல்: கற்பியல். அதிகாரம்: தனிப்படர்மிகுதி.
திருக்குறள் - குறள் 1198
வீழ்வாரின் இன்சொல் பெறாஅது உலகத்து
வாழ்வாரின் வன்கணார் இல்.
கலைஞர் மு.கருணாநிதி உரை:
பிரிந்து சென்ற காதலரிடமிருந்து ஓர் இனிய சொல்கூட வராத நிலையில், உலகில் வாழ்கின்றவரைப் போல், கல் நெஞ்சம் உடையவர் யாரும் இருக்க முடியாது.
மு.வரதராசனார் உரை:
தான் விரும்பும் காதலரின் இனிய சொல்லைப் பெறாமல் உலகத்தில் ( பிரிவுத் துன்பத்தைப் பொறுத்து) வாழ்கின்றவரைப் போல் வன்கண்மை உடையவர் இல்லை.
சாலமன் பாப்பையா உரை:
தம்மால் விரும்பப்படும் கணவனிடமிருந்து ஓர் இன்சொல் கூடப் பெறாமல் உயிர் வாழும் மனைவியைப் போன்ற கொடியவர் இவ்வுலகத்தில் வேறு இல்லை.
பரிமேலழகர் உரை:
(தலைமகன் தூது வரக்காணாது சொல்லியது.) வீழ்வாரின் இன்சொல் பெறாது வாழ்வாரின் - தம்மால் விரும்பப்படும் காதலர் திறத்துநின்றும்ஓர் இன்சொல்லளவும் பெறாதே பிரிவாற்றி உயிர் வாழ்கின்ற மகளிர் போல; வன்கணார் உலகத்து இல் - வன்கண்மையுடையார் இவ்வுலகத்து இல்லை. ('காதலர்திற
மணக்குடவர் உரை:
தம் காதலரிடத்துநின்று வரும் இனியசொற்களைக் கேளாது உயிர்வாழ்வாரைப்போல வன்கண்மையுடையார் இவ்வுலகத்து இல்லை.
திருக்குறளார் வீ. முனிசாமி உரை:
தம்மால் காதலிக்கப்படும் தலைவரிடமிருந்து ஓர் இனியசொல்லையும் பெறாமல் இருந்து பிரிவினையைப் பொறுத்துக்கொண்டு வாழ்கின்ற பெண்கள் போல வன்கண்மையுடையார் இவ்வுலகில் இல்லை.
Translation:
Who hear from lover's lips no pleasant word from day to day,
Yet in the world live out their life,- no braver souls than they!.
Explanation:
There is no one in the world so hard-hearted as those who can live without receiving (even) a kind word from their beloved.
திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்