திருக்குறள் - குறள் 1181
குறள் பால்: காமத்துப்பால். குறள் இயல்: கற்பியல். அதிகாரம்: பசப்புறுபருவரல்.

திருக்குறள் - குறள் 1181
நயந்தவர்க்கு நல்காமை நேர்ந்தேன் பசந்தவென்
பண்பியார்க்கு உரைக்கோ பிற.
கலைஞர் மு.கருணாநிதி உரை:
என்னைப் பிரிந்து செல்வதற்கு என் காதலர்க்கு ஒப்புதல் அளித்துவிட்டேன்; ஆனால், இப்போது பிரிவுத் துன்பத்தால் என்னுடலில் பசலை படர்வதை, யாரிடம் போய்ச் சொல்வேன்?.
மு.வரதராசனார் உரை:
விரும்பிய காதலர்க்கு அன்று பிரிவை உடன்பட்டேன்; பிரிந்தபின் பசலை உற்ற என் தன்மையை வேறு யார்க்குச் சென்று சொல்வேன்?.
சாலமன் பாப்பையா உரை:
என்னை விரும்பிய என்னவர் பிரியச் சம்மதித்த நான், அவர் பிரிவைத் தாங்காமல் பசலை கொண்ட என் மேனியின் இயல்பை யாரிடம் போய்ச் சொல்வேன்?.
பரிமேலழகர் உரை:
[அது, பசப்புற்ற பருவரல் என விரியும்.அஃதாவது, பசப்புறுதலானாய வருத்தம். இதனைப் 'பந்தெறிந்த வயா' (கலித், குறிஞ் .3) என்பதுபோலக் கொள்க. பசப்பாவது, பிரிவாற்றாமையான் வருவதோர் நிறவேறுபாடு. இது, தலைமகனைக் காணப் பெறாதவழி நிகழ்வதாகலின், கண் விதுப்பு அழிதலின்பின் வை
மணக்குடவர் உரை:
காதலிக்கப்பட்டவர்க்கு அவர் அருளாமையை இசைந்த யான் பசந்தவெனது நிறத்தை மற்று யாவர்க்குச் சொல்லுவேன். இது தலைமகள் இப்பசப்பை யாவரால் நீக்குவேனென்று வெருட்சி கொண்டு கூறியது.
திருக்குறளார் வீ. முனிசாமி உரை:
என்னிடம் நயந்து பேசிய தலைவர்க்குப் பிரிவை உடன்பட்டேன். அப் பிரிவினைப் பொறுக்காமல் இப்போது பசந்த எனது நிலையினை யார்க்குச் சொல்லுவேன்?.
Translation:
I willed my lover absent should remain;
Of pining's sickly hue to whom shall I complain?.
Explanation:
I who (then) consented to the absence of my loving lord, to whom can I (now) relate the fact of my having turned sallow.

திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்