திருக்குறள் - குறள் 1089

குறள் பால்: காமத்துப்பால். குறள் இயல்: களவியல். அதிகாரம்: தகையணங்குறுத்தல்.


திருக்குறள் - குறள் 1089


பிணையேர் மடநோக்கும் நாணும் உடையாட்கு
அணியெவனோ ஏதில தந்து.


கலைஞர் மு.கருணாநிதி உரை:
பெண்மானைப் போன்ற இளமை துள்ளும் பார்வையையும், நாணத்தையும் இயற்கையாகவே அணிகலன்களாகக் கொண்ட இப்பேரழகிக்குச் செயற்கையான அணிகலன்கள் எதற்காக?.

மு.வரதராசனார் உரை:
பெண்மானைப் போன்ற இளமைப் பார்வையும் நாணமும் உடைய இவளுக்கு, ஒரு தொடர்பும் இல்லாத அணிகளைச் செய்து அணிவது ஏனோ?.

சாலமன் பாப்பையா உரை:
பெண்மானைப் போன்ற அச்சப் பார்வையையும் உள்ளத்தில் நாணத்தையும் நகைகளாகக் கொண்டிருக்கும் இவளுக்கு வேறு வேறு வகைப்பட்ட நகைகளை அணிவித்திருப்பது எதற்காகவோ?.

பரிமேலழகர் உரை:
(அணிகலத்தானாய வருத்தம் கூறியது.) பிணை ஏர் மடநோக்கும் நாணும் உடையாட்கு - புறத்து மான் பிணை ஒத்த மடநோக்கினையும் அகத்து நாணினையும் உடையாளாய இவட்கு; ஏதில தந்து அணி எவன்? - ஒற்றுமை உடைய இவ்வணிகளே அமைந்திருக்க வேற்றுமையுடைய அணிகளைப் படைத்து அணிதல் என்ன பயனுடைத்


மணக்குடவர் உரை:
பிணையையொத்த மடப்பத்தினையுடைய நோக்கினையும் நாணினையும் உடைய வட்குப் பிறிது கொணர்ந்து அணிவது யாதினைக் கருதியோ? பிறரை வருத்துவதற்கு இவைதாமே அமையும். இது, தான் அவளைக் கொடுமை கூறுவான் போல நலம் பாராட்டியது.


Translation:
Like tender fawn's her eye; Clothed on is she with modesty;
What added beauty can be lent; By alien ornament?.

Explanation:
Of what use are other jewels to her who is adorned with modesty, and the meek looks of a hind ?.

திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்