திருக்குறள் - குறள் 1078

குறள் பால்: பொருட்பால். குறள் இயல்: குடியியல். அதிகாரம்: கயமை.


திருக்குறள் - குறள் 1078


சொல்லப் பயன்படுவர் சான்றோர் கரும்புபோல்
கொல்லப் பயன்படும் கீழ்.


கலைஞர் மு.கருணாநிதி உரை:
குறைகளைச் சொன்னவுடனே சான்றோரிடம் கோரி பயனைப் பெற முடியும்; ஆனால் கயவரிடமோ கரும்பை நசுக்கிப் பிழிவதுபோல், போராடித்தான் கோரிய பயனைப் பெற முடியும்.

மு.வரதராசனார் உரை:
அணுகிக்குறை சொல்லிய அளவிலேயே சான்றோர் பயன்படுவர்; கரும்புபோல் அழித்துப் பிழிந்தால்தான் கீழ்மக்கள் பயன்படுவர்.

சாலமன் பாப்பையா உரை:
இல்லாதவர் சென்று தம் நிலையைச் சொன்ன அளவில், சான்றோர் இரங்கிக் கொடுப்பர்; கயவர்களோ கரும்பைப் பிழிவதுபோல் பிழிந்தால்தான் கொடுப்பர்.

பரிமேலழகர் உரை:
சொல்லப் பயன்படுவர் சான்றோர் -மெலியர் சென்று தம் குறையைச் சொல்லிய துணையானே இரங்கிப் பயன்படுவர் மேலாயினார்; கீழ் கரும்புபோல் கொல்லப் பயன்படும் - மறைக் கீழயினார் கரும்பு போல வலியார் நைய நெருக்கிய வழிப் பயன்படுவர். (பயன்படுதல்: உள்ளது கொடுத்தல். கீழாயினாரது இ


மணக்குடவர் உரை:
பிறர் தங்குறையைச் சொல்ல அதற்கு இரங்கிப் பயன்படுவர் மேன்மக்கள். அவ்வாறன்றிக் கரும்பு பயன்படுமாறு போலத் தம்மை நெருக்கினால் பயன்படுவர் கீழ்மக்கள். இஃது ஒறுப்பார்க்குக் கொடுப்பரென்றது.

திருக்குறளார் வீ. முனிசாமி உரை:
மெலியார் தமது குறையினைச் சொல்லியவுடனேயே சான்றோர் பயன்படுவர். மற்றைய கயவர் கரும்புபோல் நைய நெருக்கியபோதுதான் பயன்படுவர்.

Translation:
The good to those will profit yield fair words who use;
The base, like sugar-cane, will profit those who bruise.

Explanation:
The great bestow (their alms) as soon as they are informed; (but) the mean, like the sugar-cane, only when they are tortured to death.

திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்