திருக்குறள் - குறள் 1076

குறள் பால்: பொருட்பால். குறள் இயல்: குடியியல். அதிகாரம்: கயமை.


திருக்குறள் - குறள் 1076


அறைபறை அன்னர் கயவர்தாம் கேட்ட
மறைபிறர்க்கு உய்த்துரைக்க லான்.


கலைஞர் மு.கருணாநிதி உரை:
மறைக்கப்பட வேண்டிய இரகசியம் ஒன்றைக் கேட்ட மாத்திரத்தில், ஓடிச் சென்று பிறருக்குச் சொல்லுகிற கயவர்களைத், தமுக்கு என்னும் கருவிக்கு ஒப்பிடலாம்.

மு.வரதராசனார் உரை:
கயவர், தாம் கேட்டறிந்த மறைப்பொருளைப் பிறர்க்கு வலிய கொண்டுபோய்ச் சொல்லுவதலால், அறையப்படும் பறை போன்றவர்.

சாலமன் பாப்பையா உரை:
தாம் அறிந்த ரகசியங்களைப் பிறரிடம் வலியச் சென்று சொல்லுவதால், அடிக்கப்படும் பறையைப் போன்றவர் கயவர்.

பரிமேலழகர் உரை:
தாம் கேட்ட மறை உய்த்துப் பிறர்க்கு உரைக்கலான் - தாம் கேட்ட மறைகளை இடந்தோறும் தாங்கிக்கொண்டு சென்று பிறர்க்குச் சொல்லுதலான்; கயவர் அறை பறை அன்னர் - கயவர் அறையப்படும் பறையினை ஒப்பர். (மறை: வெளிப்படின் குற்றம் விளையும் என்று பிறரை மறைத்து ஒருவன் சொல்லிய சொல்


மணக்குடவர் உரை:
 கயவர் அறையும் பறைபோல்வர்; தாங்கேட்ட மறைகளைப் பிறர்க்குக் கொண்டு சென்று அறிவித்தலான். இஃது அடக்கமில ரென்றது.

திருக்குறளார் வீ. முனிசாமி உரை:
கயவர் தாம் கேட்டறிந்த மறைபொருள்களைப் போகும் இடமெல்லாம் தாங்கிக் கொண்டுபோய் மற்றவர்களுக்குச் சொல்லுதலால், அக்கயவர் அடிக்கப்படுகின்ற பறையினை ஓப்பராவர்.

Translation:
The base are like the beaten drum; for, when they hear
The sound the secret out in every neighbour's ear.

Explanation:
The base are like a drum that is beaten, for they unburden to others the secrets they have heard.

திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்