திருக்குறள் - குறள் 1066

குறள் பால்: பொருட்பால். குறள் இயல்: குடியியல். அதிகாரம்: இரவச்சம்.


திருக்குறள் - குறள் 1066


ஆவிற்கு நீரென்று இரப்பினும் நாவிற்கு
இரவின் இளிவந்த தில்.


கலைஞர் மு.கருணாநிதி உரை:
தாகம் கொண்டு தவிக்கும் பசுவுக்காகத் தண்ணீர் வேண்டுமென இரந்து கேட்டாலும்கூட, அப்படிக் கேட்கும் நாவுக்கு, அதைவிட இழிவானது வேறொன்றுமில்லை.

மு.வரதராசனார் உரை:
பசுவிற்கு நீர் வேண்டும் என்று அறம் நோக்கி இரந்து கேட்டாலும், இர த்தலை விட நாவிற்கு இழிவானது மற்றொன்று இல்லை.

சாலமன் பாப்பையா உரை:
பசுவிற்குத் தண்ணீர் வேண்டும் என்று பிறரிடம் பிச்சையாகக் கேட்டாலும் அதுவும் பிச்சையாதலால், நம் நாவிற்கு அதைவிடக் கேவலம் வேறு இல்லை.

பரிமேலழகர் உரை:
ஆவிற்கு நீர் என்று இரப்பினும் - தண்ணீர் பெறாது இறக்கும் நிலைமைத்தாயதோர் ஆவினைக் கண்டு, அறம் நோக்கி இதற்குத் தண்ணீர் தரல்வேண்டும் என்று இரந்து சொல்லுங்காலும்; இரவின் நாவிற்கு 'இளிவந்தது இல்' - அவ்விரவுபோல ஒருவன் நாவிற்கு இளிவந்தது பிறிது இல்லை. (ஆகாத்தோம்ப


மணக்குடவர் உரை:
இப் பசுவிற்குத் தண்ணீர் தருமினென்று பிறரை இரப்பினும் நாவினுக்கு இரத்தல்போல இளிவரவு தருவது பிறிது இல்லை. இஃது அறத்திற்காக இரத்தலும் ஆகா தென்றது.

திருக்குறளார் வீ. முனிசாமி உரை:
தண்ணீரன்றித் தவிக்கும் பசுவிற்குத் தண்ணீர் தரல் வேண்டும் என்று இரந்து கேட்கும் போதும், அவ்வாறு யாசிப்பது போல் ஒருவன் நாவிற்கு இழிவினைத் தருவது வேறில்லையாம்.

Translation:
E'en if a draught of water for a cow you ask,
Nought's so distasteful to the tongue as beggar's task.

Explanation:
There is nothing more disgraceful to one's tongue than to use it in begging water even for a cow.

திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்