திருக்குறள் - குறள் 1009
குறள் பால்: பொருட்பால். குறள் இயல்: குடியியல். அதிகாரம்: நன்றியில்செல்வம்.
திருக்குறள் - குறள் 1009
அன்பொரீஇத் தற்செற்று அறநோக்காது ஈட்டிய
ஒண்பொருள் கொள்வார் பிறர்.
கலைஞர் மு.கருணாநிதி உரை:
அன்பெனும் பண்பை அறவே நீக்கி, தன்னையும் வருத்திக் கொண்டு, அறவழிக்குப் புறம்பாகச் சேர்த்துக் குவித்திடும் செல்வத்தைப் பிறர் கொள்ளை கொண்டு போய் விடுவர்.
மு.வரதராசனார் உரை:
பிறரிடம் செலுத்தும் அன்பையும் விட்டுத் தன்னையும் வருத்தி அறத்தையும் போற்றாமல் சேர்த்து வைத்தப் பெரும் பொருளைப் பெற்று நுகர்பவர் மற்றவரே.
சாலமன் பாப்பையா உரை:
பிறர்க்கு ஈயாமல் அன்பை விட்டு விலகி, எதையும் அனுபவிக்காமல் தன்னை வருத்தி, அறத்தை எண்ணாது சேர்த்த பொருளை மற்றவர் அனுபவிப்பர்.
பரிமேலழகர் உரை:
அன்பு ஒரீஇ - ஒருவன் கொடாமைப் பொருட்டுச் சுற்றத்தார் நட்டார்கண் அன்பு செய்தலையொழிந்து; தன் செற்று- வேண்டுவன நுகராது தன்னைச் செறுத்து; அறம் நோக்காது - வறியார்க்கு ஈதல் முதலிய அறத்தை நினைப்பதும் செய்யாது; ஈட்டிய ஒண்பொருள் கொள்வார் பிறர் - ஈட்டிய ஒள்ளிய பொருள
மணக்குடவர் உரை:
பொருள் தேடுங்கால் பிறர்மாட்டு அன்பு செய்தலையும் நீக்கி, அது தேடினானாகிய தன்னைக் காத்தலுமின்றி அறத்தையுஞ் செய்யாது, தொகுத்த ஒள்ளிய பொருளைக் கொள்வார் பிறர்.
Translation:
Who love abandon, self-afflict, and virtue's way forsake
To heap up glittering wealth, their hoards shall others take.
Explanation:
Strangers will inherit the riches that have been acquired without regard for friendship, comfort and charity.
திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்