பிள்ளையார் வழிபாடு தரும் பலன்கள் என்ன ?

பிள்ளையார் வழிபாடு தரும் பலன்கள்

பிள்ளையார் வழிபாடு தரும் பலன்கள் என்ன ?

இன்று 28/2/2020 வெள்ளிக்கிழமை எந்தப் பிள்ளையார்... என்னென்ன பலன்கள்?பிள்ளையார் வழிபாடு தரும் பலன்கள் என்ன ?என்று பார்க்கலாம் ஒரு சொடக்குப் போடுகிற நாழிகைக்குள் அவர் ஒளவைப் பாட்டியைக் கைலாசத்தில் சேர்த்துவிட்டார். பெரிய அநுக்கிரகத்தை அநாயசமாகச் செய்கிற ஸ்வாமி விக்நேசுவரர்.

பிள்ளையார், முழுமுதற் கடவுள். எந்தவொரு செயலைச் செய்வதாக இருந்தாலும், எந்தவொரு கடவுளை வணங்குவதாக இருந்தாலும், முதற்கடவுள் ஆனைமுகனை வணங்கிவிட்டுத்தான் வழிபாட்டைத் தொடங்குவோம்.

அப்பேர்ப்பட்ட தானைத்தலைவன் விநாயகரை, மஞ்சள் பிடித்து பூஜை செய்வோம். குங்குமத்தால் பிள்ளையார் செய்து வழிபடுவோம். எப்படி வேண்டுமானாலும் பிள்ளையாரை வணங்கலாம்.

எந்தந்த பிள்ளையார், என்னவெல்லாம் நன்மைகளை நமக்கு வழங்கி அருள்கிறார் என்பதைப் பார்ப்போம்.

மஞ்சளில் பிள்ளையார் பிடித்து வழிபட்டால், சகல சௌபாக்கியமும் கிடைக்கும். காரியங்கள் யாவிலும் துணைநின்று வெற்றியைத் தந்தருள்வார் விநாயகப் பெருமான்.

குங்குமத்தால் பிள்ளையார் பிடித்து வைத்து வணங்கினால், செவ்வாய் முதலான தோஷங்கள் அனைத்தும் அகலும்.குழந்தைகள் கல்வி கேள்விகளில் சிறந்துவிளங்குவார்கள்.

புற்று மண்ணினால் பிள்ளையார் செய்து வணங்கினால், தீராத நோய்களும் தீரும். விவசாயம் தழைக்கும். தனம் தானியம் பெருகும்.

வெல்லத்தில் பிள்ளையார் பிடித்து வைத்து வணங்கினால் உடலில் உள்ளேயும் வெளியேயும் உள்ள கட்டிகள், கொப்புளம் முதலானவை விரைவில் கரைந்து குணமாகும். ஆரோக்கியத்துடன் வாழச் செய்வார் ஆனைமுகன்.

உப்பினால் பிள்ளையார் பிடித்து வைத்து வணங்கினால் எதிரிகளின் தொல்லை நீங்கும். எதிரிகளையும் எதிர்ப்புகளையும் விரட்டுவார்.

வெள்ளெருக்கில் பிள்ளையார் செய்து வணங்கினால் பில்லி, சூனியம் விலகும். தீயசக்திகள் அண்டாது காப்பார். நல்ல எண்ணங்களும் சிந்தனைகளும் மேலோங்கும். ஐஸ்வர்யம் பெருகும்.

விபூதியால் விநாயகர் பிடித்து வழிப்பட்டால் உஷ்ணம் சம்பந்தப்பட்ட நோய்கள் நீங்கும். உத்தியோக உயர்வும் ஞானமும் கிடைக்கப் பெறலாம்.

சந்தனத்தால் பிள்ளையார் செய்து வழிபட்டால் புத்திர பாக்கியம் கிடைக்கப் பெறலாம். சந்ததி சிறந்துவிளங்கும்.

சாணத்தால் பிள்ளையார் செய்துவழிபட்டால் சகல தோஷமும் விலகும். வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறும். வீடுமனை வாங்கும் யோகம் கிட்டும்.

வாழைப் பழத்தில் பிள்ளையார் செய்து வழி பட்டால் வம்ச விருத்தி உண்டாகும். தம்பதி ஒற்றுமை மேலோங்கும். வீட்டில் நிம்மதி குடிகொள்ளும்.

வெண்ணெயில் பிள்ளையார் செய்து வழிபட்டால் கடன் தொல்லை நீங்கும். ஆபரணச் சேர்க்கை நிகழும்.

சர்க்கரையில் பிள்ளையார் செய்து வழிபட்டால், சர்க்கரை நோயின் வீரியம் குறையும். இனிமையான தருணங்கள் வீட்டில் எப்போதும் குடியிருக்கும்.

பசுஞ்சாண விநாயகர் நோய்களை நீக்குவார். ஆரோக்கியத்துடன் வாழச் செய்வார்.

கல் விநாயகர்- வெற்றியைத் தருவார். எடுத்த காரியங்கள் அனைத்தும் வீரியத்துடன் நடந்தேறும்.

மண்ணால் விநாயகர் செய்து வழிபட்டால், உயர் பதவிகள் தேடிவரும். கெளரவமும் அந்தஸ்தும் உயரும். தொழில் விருத்தியாகும். லாபம் அதிகரிக்கும்.

 தமிழ் நாட்டின் தனிப்பட்ட சிறப்பு எங்குப் பார்த்தாலும் பிள்ளையார் கோயில்கள் இருப்பதேயாகும். ‘கோயில்’ என்று பெயர் வைத்து விமானமும் கூரையும் போட்டுக் கட்டிடம் எழுப்ப வேண்டும் என்பதுகூட இல்லாமல், அரச மரத்தடிகளிலேயே வானம் பார்க்க அமர்ந்திருக்கும் ஸ்வாமி நமது பிள்ளையார்.

தெருவுக்குத் தெரு ஒரு பிள்ளையார் கோயில், நதிக் கரைகளிலெல்லாம் பிள்ளையார், மரத்தடிகளில் பிள்ளையார் என்றிப்படி இந்தத் தமிழ் தேசம் முழுவதும் அவர் வேறெந்த ஸ்வாமிக்கும் இல்லாத அளவுக்கு இடம் கொண்டு அருள் பாலித்து வருகிறார். அவரைப் `பிள்ளையார்’ என்றே அன்போடு கூறுவது நம் தமிழ்நாட்டுக்கே உரிய வழக்கம். சர்வலோக மாதா பிதாக்களாகிய பார்வதி பரமேசுவரர்களின் ஜேஷ்ட புத்திரர் அவர். `பிள்ளை’ என்றால் அவரைத்தான் முதலில் சொல்ல வேண்டும். வெறுமே `பிள்ளை’ என்று சொல்லக் கூடாது என்பதால் மரியாதையாகப் `பிள்ளையார்’ என்று சொல்வது தமிழ்நாட்டுச் சிறப்பு.

`குமாரன்’ என்றால் `பிள்ளை’ என்றே அர்த்தம். பாரததேசம் முழுவதிலும் குமாரன், குமாரஸ்வாமி என்றால் பார்வதி பரமேசுவரர்களின் இளைய பிள்ளையாகிய சுப்பிரமணியரையே குறிக்கும். தமிழிலும் `குமரக் கடவுள்’ என்கிறோம். ஆனால், அவரைக் `குமரனார்’ என்பதில்லை: `குமரன்’ என்றுதான் சொல்வார்கள். மூத்த பிள்ளைக்கே மரியாதை தோன்றப் பிள்ளையார் என்று பெயர் தந்திருக்கிறோம்.

முதல் பிள்ளை இவர்: குழந்தை ஸ்வாமி. ஆனாலும் இவரே எல்லாவற்றுக்கும் ஆதியில் இருந்தவர். பிரணவம்தான் எல்லாவற்றுக்கும் முதல். பிரணவத்திலிருந்துதான் சகல பிரவஞ்சமும் ஜீவராசிகளும் தோன்றின. அந்தப் பிரணவத்தின் ஸ்வரூபமே பிள்ளையார். அவரது ஆனைமுகம், வளைந்த தும்பிக்கை இவற்றைச் சேர்த்துப் பார்த்தால் பிரணவத்தின் வடிவமாகவே தோன்றும்.

குழந்தையாக இருந்துகொண்டே ஆதிமுதலின் தோற்றமாக இருக்கிற பிள்ளையார் குழந்தைபோல் தோன்றினாலும், பக்தர்களை ஒரேயடியாகக் கைதூக்கி உயர்த்தி விடுவதிலும் முதல்வராக இருக்கிறார். ஒளவைப் பாட்டி ஒருத்தியின் உதாரணமே போதும். ஒளவையார், பெரிய கணபதி உபாஸகி. பிரணவ ஸ்வரூபியான விநாயகரைப் புருவமத்தியில் தியானித்துக் கொண்டு, ஒளவையார் யோக சாஸ்திரம் முழுவதையும் அடக்கியதான `விநாயகர் அகவலை’ப் பாடியிருக்கிறாள். அதைப் பாராயணம் செய்தால் பரமஞானம் உண்டாகும். இந்த ஒளவையாரைப் பற்றி ஒரு கதை உண்டு. சுந்தரமூர்த்தி ஸ்வாமிகளும் சேரமான் பெருமாள் நாயனாரும் கைலாசத்துக்குப் புறப்பட்டார்கள். அவர்கள் ஒளவையாரையும் உடன் அழைத்துப் போக எண்ணினார்கள். அப்போது ஒளவை விக்நேசுவரருக்குப் பூஜை பண்ணிக் கொண்டிருந்தாள். சீக்கிரம் பூஜையை முடித்துத் தங்களுடன் கைலாசத்துக்கு வருமாறு சுந்தரமூர்த்தியும் சேரமானும் அவளை அவசரப்படுத்தி அழைத்தார்கள். அவளோ, `நீங்கள் போகிறபடி போங்கள். உங்களுக்காக நான் என் பூஜையை வேகப்படுத்த மாட்டேன். விநாயக பூஜையே எனக்குக் கைலாசம்’ என்று சொல்லி விட்டாள். அவர்கள் அப்படியே கிளம்பி விட்டார்கள். ஒளவை சாங்கோபாங்கமாகப் பூஜை செய்து முடித்தாள். முடிவில் பிள்ளையார் பிரசன்னமாகி அவளை அப்படியே தம் துதிக்கையால் தூக்கி ஒரே வீச்சில் கைலாசத்தில் கொண்டு சேர்த்துவிட்டார். அவளுக்குப் பிற்பாடுதான்

சுந்தரமூர்த்தியும் சேரமான் பெருமாளும் கைலாசத்தை அடைந்தார்கள். அங்கே சேரமான் பெருமாள் திருக்கைலாய ஞான உலாவைப் பாடினார். இதை அருணகிரிநாதர் திருப்புகழில்,

ஆதரம் பயில் ஆரூரர் தோழமை

சேர்தல் கொண்டவரோடே முனாளினில்

ஆடல் வெம்பரி மீதேறி மா கயிலையிலேகி

ஆதி அந்த உலா ஆசு பாடிய

சேரர்....

என்பதில் சொல்லாமல் சொல்கிறார். `அப்படிப்பட்ட சேரர் ஆண்ட கொங்கு தேசத்தில் உள்ள பழனியில் இருக்கிற பெருமாளே’ என்று பழனியாண்டவனைப் பாடுகிறார். சுந்தரரும், சேரமான் பெருமாள் நாயனாரும் கைலாசம் சேர்ந்ததற்கு இப்படி குமாரஸ்வாமியின் சம்பந்தத்தை உண்டாக்குகிறார். மூத்த குமாரரான பிள்ளையாருக்கோ ஏற்கனேவே அந்தச் சம்பவத்தில் சம்பந்தம் இருக்கிறது. அந்த இரண்டு பேருக்கும் முன்னதாக, ஒரு சொடக்குப் போடுகிற நாழிகைக்குள் அவர் ஒளவைப் பாட்டியைக் கைலாசத்தில் சேர்த்துவிட்டார். பெரிய அநுக்கிரகத்தை அநாயசமாகச் செய்கிற ஸ்வாமி விக்நேசுவரர்.

நன்றி: தெய்வத்தின் குரல் (முதல் பாகம்)