மாடித் தோட்டம் புதினா பயிரிடும் முறை

மாடித் தோட்டம் புதினா பயிரிடும் முறை

மாடித் தோட்டம் புதினா பயிரிடும் முறை

நாம் அனைவரும் அன்றாட காய்கறிகளை நமது வீட்டு மாடியில் பயிர் செய்யலாம். இவ்வாறு பயிர் செய்வதினால் நமக்கு உடல் நலத்தை காப்பதுடன் இயற்கை முறையில் விளைந்த காய்கறிகளை உண்ட திருப்தியும் ஏற்படும். எனவே நம்மால் முடிந்த அளவுக்கு மாடித்தோட்டங்களை ஏற்படுத்தலாம். மாடித்தோட்டத்தில் புதினா பயிரிடும் முறையை இங்கு காணலாம்.

தேவையான பொருட்கள்

  1. Grow Bags அல்லது Thotti
  2. அடியுரமாக இட மணல், தென்னை நார்க்கழிவு, மண்புழு உரம், செம்மண், பஞ்சகாவ்யா, வேப்பந்தூள்.
  3. குச்சி (போத்துகள்)
  4. பூவாளி தெளிப்பான்

தொட்டிகள்

புதினா படர்ந்து வளர்வதால் தேர்வு செய்யும் பை அல்லது தொட்டியானது சற்று அகலமானதாக இருக்க வேண்டும்.

தேர்வு செய்த தொட்டி அல்லது பைகளில் அடியுரமாக ஒரு பங்கு மண், ஒரு பங்கு இயற்கை உரம், ஒரு பங்கு தென்னை நார்க்கழிவு ஆகியவற்றை கொண்டு தொட்டியை நிரப்ப வேண்டும்.

பைகளில் உரங்களை நிரப்பும் போது, ஒரு அடி ஆழத்திற்கு மேல் நிரப்ப வேண்டும்.

விதைத்தல்

புதினா குச்சிகளை தொட்டியின் அளவைப் பொறுத்து குறிப்பிட்ட இடைவெளியில் ஊன்ற வேண்டும். அதன் வேர் பகுதிகள் முழுவதும் மறையும் படி ஊன்ற வேண்டும்.

நீர் நிர்வாகம்

குச்சிகளை விதைத்தவுடன் பூவாளி கொண்டு நீர் தெளிக்க வேண்டும். பின்னர் தினமும் காலை அல்லது மாலை வேளையில் தண்ணீர் தெளிக்க வேண்டும்.

தென்னை நார்க்கழிவுகளை அடியுரமாக போட்டிருப்பதால் ஈரப்பதத்தைக் கண்காணித்து தண்ணீர் ஊற்ற வேண்டும். ஏனெனில் அது அதிக ஈரப்பதத்தை தக்க வைத்துக்கொள்ளும்.

உரங்கள்

சமையலறைக் கழிவுகளை மக்கச்செய்து உரமாக போடலாம். மண்புழு உரத்தை அடியுரமாக இடுவதால் வளர்ச்சி சிறப்பாக இருக்கும்.

ஒரு கையளவு சாணத்தை இரண்டு லிட்டர் தண்ணீரில் கலந்து மாதம் ஒருமுறை ஊற்ற வேண்டும்.

பாதுகாப்பு முறைகள்

கீரைகள் வாடுவதை தவிர்க்க கீரை வளர்க்கும் பகுதியைச் சுற்றிலும் வலை அமைக்கலாம். இல்லையெனில் நிழல் விழும் இடத்தில் தொட்டியை மாற்றி வைக்கலாம்.

இலைகளில் பூச்சி தாக்குதல் காணப்பட்டால் வேப்பந்தூளை தண்ணீரில் கலந்து வேர்ப் பகுதியில் ஊற்ற வேண்டும். இது சிறந்த பூச்சி விரட்டியாகவும், உரமாகவும் செயல்படும்.

இதன் காய்ந்த பகுதிகளை அவ்வப்பொழுது நீக்கிவிட வேண்டும்.

அறுவடை

கீரைகளை இதன் வேர்ப்பகுதியில் இருந்து கிள்ளி எடுக்க வேண்டும். அப்பொழுது தான் மறுபடியும் தழைத்து வர ஏதுவாக இருக்கும்.

பயன்கள்:

  • உடலுக்கு நோய் எதிர்புச் சக்தி அளிக்கக்கூடியது. உணவை செரிமானம் செய்யவும், உணவு செரிமானம் சம்மந்தமாக வரும் வெப்பத்தையும் ஜூரத்தையும் நீக்கவல்லது.
  • வயிற்றுப்போக்கு ஏற்பட்ட சமயம் புதினாக்கீரை துவையலை சாதத்துடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் வயிற்றுப்போக்கு நிற்கும்.
  • மூச்சுத்திணறல் நிற்க புதினா இலையைச் சிறிதளவு எடுத்து மூன்று மணி நேரம் தண்ணீரில் ஊறவைத்து பின் அந்த நீரை குடித்தால் மூச்சுத்திணறல் பிரச்னை நீங்கும்.
  • புதினாவை உலர்த்திப் போடி செய்து பற்பொடியாக உபயோகப்படுத்தினால் பற்களுக்கு நல்லது. ஈறுகளும் வலிமை பெரும்.
  • மஞ்சள் காமாலை, வாதம்,வறட்டு இருமல், சோகை, நரம்புத் தளர்ச்சி ஆகியவற்றுக்கும் புதினாக் கீரை சிறந்த மருந்தாகப் பயன்படுகிறது.