மாடித் தோட்டம் தக்காளி பயிரிடும் முறை

 0  9
மாடித் தோட்டம் தக்காளி  பயிரிடும் முறை

நாம் அனைவரும் அன்றாட காய்கறிகளை நமது வீட்டு மாடியில் பயிர் செய்யலாம். இவ்வாறு பயிர் செய்வதினால் நமக்கு உடல் நலத்தை காப்பதுடன் இயற்கை முறையில் விளைந்த காய்கறிகளை உண்ட திருப்தியும் ஏற்படும். எனவே நம்மால் முடிந்த அளவுக்கு மாடித்தோட்டங்களை ஏற்படுத்தலாம். மாடித்தோட்டத்தில் தக்காளி பயிரிடும் முறையை இங்கு காணலாம்.

தேவையான பொருட்கள்
  1. Grow Bags அல்லது Thotti
  2. அடியுரமாக இட மணல், தென்னை நார் கழிவு மக்கியது, மண் புழு உரம், செம்மண், வேப்பம் பிண்ணாக்கு, பஞ்சகாவ்யா.
  3. நாற்றுகள் அல்லது விதைகள்
  4. சொட்டு நீர் பாசனம் அமைக்க வசதி அல்லது பூவாளி தெளிப்பான்

தொட்டிகள்

இதற்கு அளவு, வடிவம் என்று எதுவும் தேவைப்படாது. அதனால் பிளாஸ்டிக், மண்பானை, உலோகம், செராமிக் என எதுவாக இருந்தாலும் பிரச்சனை இல்லை. செடிகள் வளர்ப்பதற்காக பைகளில் நிரப்பும்போது, பையின் நீளத்தில் ஒரு அங்குலத்துக்குக் கீழ் இருக்குமாறு நிரப்ப வேண்டும், முழுமையாக நிரப்பக் கூடாது.

இதில் அடியுரமாக ஒரு பங்கு மண், ஒரு பங்கு மணல், ஒரு பங்கு இயற்கை உரம் என இந்த மூன்றையும் கலந்து வைக்க வேண்டும். இந்த மண் கலவை தயாரானதும் உடனே விதைக்க கூடாது. 7-10 நாட்களில் மண் காய்ந்து, நுண்ணுயிரிகள் வேலை செய்ய தொடங்கிவிடும். இதன் பிறகு தான் விதைப்பு செய்ய வேண்டும்.

விதைத்தல்

நன்கு பழுத்த தக்காளியை எடுத்து பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அதில் நன்கு பிசைந்து விட வேண்டும். விதைகள் தனியே பிரிந்து விடும். பின் நீரை வடித்து எடுத்து சிறிது மண் அல்லது சாம்பலுடன் சேர்த்து கலந்து பேப்பரில் காய வைத்துவிட வேண்டும். இவ்வாறு காய்ந்த விதைகளை சிறிய பைகளில் விதைக்க வேண்டும். விதைகள் முளைத்து 20 முதல் 25 நாட்கள் ஆன நாற்றுகளை வேறு பைகளுக்கு மாற்ற வேண்டும்.

நாற்றுகளாக இருந்தால் அப்படியே நடவு செய்யலாம். நடும் இடைவெளியானது பைகளின் அளவை பொறுத்து மாறுபடும்.

நீர் நிர்வாகம்

நாற்று நட்டவுடன் பூவாளியால் நீர் தெளிக்க வேண்டும். பின்னர் ஒருநாள் விட்டு ஒருநாள் தண்ணீர் பாய்ச்ச வேண்டும்.

உரங்கள்

பூச்சிகளிடமிருந்து காக்க அடுப்பங்கரை குப்பையிலிருந்து செய்யும் உரமும், பஞ்சகாவ்யா உரமும் போதுமானது. டீத்தூள், முட்டை ஓடு, மக்கிய காய்கறி கழிவுகளை உரமாக போடலாம்.

செடிகளைக் காக்கும் இயற்கை பூச்சிக் கொல்லியான வேப்ப எண்ணையை மாதம் ஒரு முறை தெளிக்க வேண்டும். வேப்ப இலைகளைச் சேமித்து நன்கு காய வைத்துத் தூள் செய்துகொள்ள வேண்டும். இந்தத் தூளைச் செடி ஒன்றுக்கு ஒரு பிடி வீதம் செடியின் வேர் பகுதியில் போட்டு நன்கு கொத்திவிட வேண்டும். இதுவே அடி உரமாகவும், பூச்சிக் கொல்லியாகவும் செயல்படும்.

பாதுகாப்பு முறைகள்

வாரம் ஒரு முறையாவது செடியைச் சுற்றி அடி மண்ணைக் கொத்தி விட வேண்டும். மண்ணை கொத்தி விடாமல் தொடர்ந்து தண்ணீர் ஊற்றுவது பயன் அளிக்காது.

தக்காளி நாற்றுகளை நட்டவுடன் அதன் அருகில் சிறிய கம்பு ஒன்றினை ஊன்றிவிட வேண்டும். செடி வளர்ந்ததும் கம்புடன் சேர்த்து கட்டிவிட வேண்டும். அப்பொழுது தான் காய்க்கும் பொழுது பாரம் தாங்காமல் செடி சாயாமல் இருக்கும்.

அறுவடை

நன்கு திரண்ட பழங்களை இரு நாட்களுக்கு ஒரு முறை அறுவடை செய்ய வேண்டும்.

பயன்கள்:
  • ரத்த ஓட்டத்தை சீராக வைத்துக்கொள்ளவும், ரத்த உற்பத்திக்கும் தக்காளி உதவுகிறது. ரத்தத்தை சுத்திகரிக்கும் பணியையும் செய்கிறது.
  • தக்காளி ஜூஸை காலையில் வெறும் வயிற்றில் குடிப்பதால் தோல் சம்மந்தமான அனைத்து நோய்களும் குணமாகும். சருமத்தை பளபளப்பாகவும் ஆரோகியமாகவும் வைத்துக்கொள்ள தக்காளி உதவுகிறது.
  • தக்காளி ஜூஸை முகத்தில் தடவி 30 நிமிடங்கள் கழித்து சுத்தமான நீரில் கழுவும்போது முகம் பளபளப்பாகவும் முகத்தில் உள்ள கரும்புள்ளிகளும் மறைய தொடங்கும்.
  • தினமும் இரண்டு பழுத்த தக்காளி பழங்களை சாப்பிடுவதால் உடல்பருமனை குறைக்கலாம். உடலுக்கு வளத்தையும், பலத்தையும் தரும் ஆற்றல் உடையது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow