மாடித்தோட்டத்தில் மணத்தக்காளிகீரை பயிரிடும் முறை

Mar 31, 2023 - 00:00
 0  16
மாடித்தோட்டத்தில் மணத்தக்காளிகீரை பயிரிடும் முறை

நாம் அனைவரும் அன்றாட காய்கறிகளை நமது வீட்டு மாடியில் பயிர் செய்யலாம். இவ்வாறு பயிர் செய்வதினால் நமக்கு உடல் நலத்தை காப்பதுடன் இயற்கை முறையில் விளைந்த காய்கறிகளை உண்ட திருப்தியும் ஏற்படும். எனவே நம்மால் முடிந்த அளவுக்கு மாடித்தோட்டங்களை ஏற்படுத்தலாம். மாடித்தோட்டத்தில் மணத்தக்காளிகீரை பயிரிடும் முறை யை இங்கு காணலாம்.

தேவையான பொருட்கள்
  • 1. Grow Bags அல்லது Thotti
  • 2. அடியுரமாக இட மணல், தென்னை நார்க்கழிவு, மண்புழு உரம், செம்மண், பஞ்சகாவ்யா.
  • 3. விதைகள்
  • 4. பூவாளி தெளிப்பான்

தொட்டிகள்

தேர்வு செய்த தொட்டி அல்லது பைகளில் அடியுரமாக ஒரு பங்கு மண், ஒரு பங்கு மணல், ஒரு பங்கு தென்னை நார்க்கழிவு ஆகியவற்றை கொண்டு தொட்டியை நிரப்ப வேண்டும். இது பலமுறை அறுவடை செய்வதால் தென்னை நார்க்கழிவு சேர்ப்பதன் மூலம் மண் இறுகாமல் இலகுவாக இருக்கும். பைகளில் உரங்களை நிரப்பும் போது, அரை அடி ஆழத்திற்கு மேல் நிரப்ப வேண்டும்.

விதைத்தல்

பழுத்த பழங்களில் இருந்து விதைகளை பிரிக்க வேண்டும். பழங்களை சாம்பல் கொண்டு பிசைந்து காயவிட வேண்டும். பின் சாம்பல் கலந்துள்ள விதைகளை பைகளில்/தொட்டியில் சீராக விதைக்க வேண்டும்.

நீர் நிர்வாகம்

விதைகளை விதைத்தவுடன் பூவாளி கொண்டு நீர் தெளிக்க வேண்டும். பின்னர் தினமும் காலை அல்லது மாலை வேளையில் தண்ணீர் தெளிக்க வேண்டும்.

தென்னை நார்க்கழிவுகளை அடியுரமாக போட்டிருப்பதால் ஈரப்பதத்தைக் கண்காணித்து தண்ணீர் ஊற்ற வேண்டும். ஏனெனில் அது அதிக ஈரப்பதத்தை தக்க வைத்துக்கொள்ளும்.

உரங்கள்

சமையலறைக் கழிவுகளை மக்கச்செய்து உரமாக போடலாம். மண்புழு உரத்தை அடியுரமாக இடுவதால் வளர்ச்சி சிறப்பாக இருக்கும்.

பஞ்சகாவ்யா 10 மில்லியை, இரண்டு லிட்டர் தண்ணீரில் கலந்து வாரம் ஒரு முறை ஊற்ற வேண்டும் அல்லது ஒரு கையளவு சாணத்தை தண்ணீரில் கலந்து ஊற்ற வேண்டும். சாணம் கெட்டியாக இருந்தால் எறும்புகள் வர வாய்ப்புள்ளது. எனவே சாணத்தை நன்கு கரைத்து ஊற்ற வேண்டும்.

பாதுகாப்பு முறைகள்

அதிகளவு வெய்யில் படுவதால் கீரைகள் வாடி விடும். இதை ஈடுகட்ட கீரை வளர்க்கும் பகுதியைச் சுற்றிலும் வலை அமைக்கலாம். இல்லையெனில் சிறிது நிழல் விழும் இடத்தில் மாற்றி வைக்கலாம்.

இலைகளில் பூச்சி தாக்குதல் காணப்பட்டால் வேப்பந்தூளை தண்ணீரில் கலந்து வேர்ப் பகுதியில் ஊற்ற வேண்டும். இது சிறந்த பூச்சி விரட்டியாக செயல்படும்.

அறுவடை

கீரைகளை முற்றி விடாமல் இளம் தளிராக இருக்கும் போது அறுவடை செய்ய வேண்டும். இதன் வேர்ப்பகுதியில் இருந்து 5 செ.மீ விட்டு அறுவடை செய்ய வேண்டும். அப்பொழுது தான் மறுபடியும் தழைத்து வரும். இதன் பழங்களை சேகரித்து அடுத்த சாகுபடிக்கு பயன்படுத்தலாம்.

பயன்கள்:
  • இந்தக்கீரையை தொடர்ந்து சாப்பிட்டு வருவதால், குடல் புண், வாய்ப்புண், பால்வினை நோய்கள், உடல் உஷ்ணம், கர்பப்பை கோளாறுகள், மலச்சிக்கல், காமாலை, தலைவலி போன்ற நோய்களை நீக்கி ரத்தத்தை சுத்தம் செய்கிறது.
  • இக்கீரையின் சாறெடுத்து அதை வாயில் இட்டு சிறிது நேரம் கழித்து கொப்பளித்து வந்தால் வாய்ப்புண் ஆறும். வாய் துர்நாற்றமும் இல்லாமல் போய் விடும். வயிற்றுப்புண்களால் அவதிப்படுவோர்கள் அதிகாலையில் வெறும் வயிற்றில் கீரை சாற்றினை ஒரு அவுன்ஸ் வீதம் சுமார் பத்து நாட்கள் பருகி வந்தால் நிவாரணம் கிடைக்கும்.
  • இந்தப்பழத்தை கர்ப்பிணி பெண்கள் சாப்பிட்டு வர கர்பப்பை பலமடைந்து சுகப்பிரசவம் ஏற்படும்.
  • மணத்தக்காளி வற்றல் சாப்பிட்டு வருவதால் வாயில் ஏற்பட்ட ரணம், உடலில் ஏற்பட்ட சூடு, வாத வீக்கங்கள், குடல் புண்கள் ஆறும். வயிற்றுப்பூச்சிகளை கொள்ளும் தன்மை கொண்டது.
  • மணத்தக்காளி செடியின் வேர் முதல் நுனி வரை ஒவ்வொரு பாகமும் மருத்துவ குணம் கொண்டது. எந்த வகையிலாவது மணத்தக்காளியை உணவுடன் சேர்த்து கொள்வது என்பது உடலுக்கு ஆரோக்கியம் தரும் விஷயமாகும்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow