மண்புழு உரம் தயாரிக்கும் எளிய முறைகள்

Nov 1, 2022 - 00:00
 0  84
மண்புழு உரம் தயாரிக்கும் எளிய முறைகள்
தேவையான பொருட்கள்

மண்புழு உரம் தயாரிக்க தேவையான பொருட்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

  • மட்கக்கூடிய கழிவுகள்
  • மாட்டுச் சாணம்
  • கால்நடை கழிவுகள்
தயாரிக்கும் முறை

மட்கக்கூடிய கழிவுகளை சேகரிக்க வேண்டும். வீட்டில் கிடைக்கும் காய்கறி கழிவுகளையே இதற்கு பயன்படுத்தலாம்.

மட்கக்கூடிய கழிவுகளை மூட்டம் போட்டு, அதில் சாணக்கரைசலை தெளித்து, 20 நாட்களுக்கு மக்கவிட வேண்டும். இவ்வாறு 20 நாட்கள் மட்கிய கழிவுகள் மண்புழு சாப்பிடுவதற்கு ஏதுவாக இருக்கும். நன்றாக உலர்ந்த கால்நடை கழிவுகளையும், சாண எரிவாயுக் கழிவுகளையும் மட்டுமே மண்புழு உரம் தயாரிக்க நேரடியாக உபயோகிக்க வேண்டும்.

மண்புழு உர உற்பத்திக்கான படுக்கை

மண்புழு உரப்படுக்கை தயாரிக்க வேண்டும். இதற்கு தென்னை நார்கழிவு அல்லது கரும்புத் தோகைகளை மண்புழு உர உற்பத்திக்கான கட்டமைப்பின் அடிப்பாகத்தில் 3 செ.மீ உயரத்திற்கு பரப்பவேண்டும். ஆற்று மணலை இந்த படுக்கையின் மேல் 3 செ.மீ உயரத்திற்கு தூவ வேண்டும். பிறகு 3 செ.மீ உயரத்திற்கு தோட்டமண் பரப்ப வேண்டும். இதற்கு மேல் தண்ணீரைத் தெளிக்க வேண்டும். இவ்வாறு தயார் செய்யப்பட்டது மண்புழு உரப்படுக்கை ஆகும்.

கழிவுகளை படுக்கையில் போடும்முறை

பாதி மக்கிய கழிவுகளை 30 சதவீதம் கால்நடை கழிவுடன் (எடை அல்லது கன அளவின் அடிப்படையில்) கலக்க வேண்டும். இக்கலவையை மண்புழு உர கட்டமைப்பின் விளிம்பு வரை நிரப்ப வேண்டும். ஈரப்பதம் 60 சதவீதம் இருக்க வேண்டும். தேர்ந்தெடுக்கப்பட்ட மண்புழுக்களை சமமாக பரப்ப வேண்டும். ஒரு மீட்டர் நீளம், ஒரு மீட்டர் அகலம், 0.5 மீட்டர் உயரத்திற்கு இரண்டு கிலோ மண்புழுக்கள் (2000 மண்புழு) தேவைப்படும். மண்புழுவினை, கழிவுகளுக்குள்ளே விட வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. இதனை மேலே பரப்பினால் போதுமானது.

தண்ணீர் தெளித்தல்

தினமும் தண்ணீர் கட்டாயம் தெளிக்க வேண்டும். 60 சதவீதம் ஈரப்பதம் இருக்குமாறு பராமரிக்க வேண்டும். தேவையான போது தண்ணீரினைத் தெளிக்க வேண்டும். அப்படியே ஊற்றக் கூடாது. அறுவடைக்கு முன்னதாக தண்ணீர் தெளிப்பதை நிறுத்தி விடவேண்டும்.

மண்புழு உரம் அறுவடை

மண்புழு உர படுக்கையின் மேல் உள்ள மண்புழு கழிவினை மட்டும் அறுவடை செய்ய வேண்டும். இந்த அறுவடையை வாரத்திற்கு ஒரு முறை செய்ய வேண்டும். கையால் மண்புழு கழிவினை சேகரித்து நிழலில் குவித்து வைக்க வேண்டும். இந்த அறுவடையினை மண்புழு தெரியும் இடம் வரை செய்ய வேண்டும். இந்த அறுவடையினை தகுந்த இடைவெளியில் செய்வதன் மூலம் நல்ல தரமான மண்புழு உரத்தினை பெறமுடியும். சிறிய படுக்கை முறையில், தகுந்த இடைவெளியில் மண்புழு உர அறுவடை தேவையில்லை. இந்த முறையில் கழிவுகளின் குவிப்பு 1மீட்டர் வரை இருப்பதனால், இந்த கழிவுகள் முழுவதும் மக்கிய பிறகு அறுவடை செய்தால் போதுமானது.

மண்புழு அறுவடை

மண்புழு உரம் தயாரிப்பு முடிந்தவுடன், மண்புழுக்கள் கருவுருதல் முறையில் உரத்திலிருந்து பிரித்தெடுக்கப்படுகின்றன. இம்முறையில் சிறிய மாட்டு சாணப்பந்துகள் உரக்குழியில் பல இடங்களில் வைக்க வேண்டும். இதனால் மண்புழுக்கள் அந்த சாணத்தினால் கவரப்படுகின்றன. பிறகு இதனை தண்ணீரில் போடுவதன் மூலம் சாணம் கரைந்து மண் புழுக்கள் பிரித்தெடுக்கப்படுகின்றன. இந்தப் புழுக்கள், அடுத்த மண்புழ உரம் தயாரிக்கப் பயன்படுத்தப்படுகின்றன.

மண்புழு உரம் சேமிப்பு

இதனை நேரடியாகவே வயல்களில் பயன்படுத்தலாம். சேமிக்க நினைத்தால் அறுவடை செய்யப்பட்ட மண்புழு உரத்தை இருட்டான அறையில் 40 சதவிகிதம் ஈரப்பதத்தில், சூரிய ஒளி படாதவாறு வைக்க வேண்டும். இவ்வாறு வைப்பதால் ஈரப்பதம் வீணாவதைத் தடுக்கலாம். மக்கிய உரத்தை பாக்கெட் செய்வதை விட திறந்த வெளியில் சேமிப்பது சிறந்ததாகும். திறந்த வெளியில் மக்கிய உரத்தை சேமிக்கும் பொழுது தண்ணீர் தெளித்து ஈரப்பதத்தை காக்க வேண்டும். இதனால் நுண்ணுயிர்கள் அழிவதை தடுக்கலாம். 40 சதவிகிதம் ஈரப்பதத்துடன் வைப்பதினால் மண்புழு உரத்தின் தரம் குறையாமல் பாதுகாக்கலாம். விற்கும் சமயத்தில் மட்டுமே பைகளில் நிரப்ப வேண்டும்.

நன்மைகள்
  • மற்ற மக்கும் உரங்களை விட மண்புழு உரத்தில் அதிக சத்துக்கள் உள்ளன.
  • மண்புழு உரத்தில் நன்மை தரும் நுண்ணுயிர்களான அசட்டோபேக்டர், அசோஸ்பைரில்லம் மற்றும் பாஸ்போ பேக்டீரியாக்கள் அதிக எண்ணிக்கையில் இருக்கின்றன.
  • இந்த நன்மை தரும் நுண்ணுயிர்கள் காற்றில் இருக்கும் தழைச்சத்தை மண்புழு உரத்தில் நிலைநிறுத்துகிறது. பயிர்களுக்கு வேண்டிய வளர்ச்சி ஊக்கிகளை சுரந்து மண்புழு உரத்தில் நிலை பெறச் செய்கிறது.
  • கரையாமல் இருக்கும் மணிச்சத்தை கரைத்து கொடுக்கிறது.
  • திடக்கழிவுகளில் ஏதேனும் நச்சுத் தன்மை கொண்ட பொருட்கள் இருந்தால் அவை மண்புழு வயிற்றுக்குள் செல்லும் பொழுது அவைகளின் குணங்கள் மாற்றப்படுகின்றன.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow