தேமோர், அரப்பு மோர், மீன் கரைசல் தயாரிக்கும் முறை

Oct 2, 2022 - 00:00
 0  81
தேமோர், அரப்பு மோர், மீன் கரைசல் தயாரிக்கும் முறை
தேமோர் கரைசல்

தேவையான பொருட்கள்

புளித்த மோர் – 5 லிட்டர்

தேங்காய்ப்பால் – 1 லிட்டர்

தேங்காய் துருவல் – 10 தேங்காய்

அழுகிய பழங்கள் – 10 கிலோ

தயாரிப்பு முறை

புளித்த மோர் மற்றும் தேங்காய்ப்பால் ஆகியவற்றை ஒன்றாகக் கலந்து ஒரு மண்பானை அல்லது பிளாஸ்டிக் கேனில் இட்டு, நிழலான இடத்தில் வைக்க வேண்டும்.

இவற்றுடன் 10 தேங்காய்களின் துருவல், அழுகிய பழங்கள் 10 கிலோ இவற்றை பொட்டலம் போல் கட்டி அதில் போட வேண்டும்.

தினமும் கரைசலைக் கலக்கி வரவேண்டும்.

ஏழு நாட்களில் தேமோர்க் கரைசல் தயாராகி விடும். 8-ம் நாள், ஒரு லிட்டர் தண்ணீரில் 50 மில்லி தேமோர்க் கரைசல் என்ற விகிதத்தில் கலந்து, காலை அல்லது மாலை நேரத்தில் செடிகளுக்குத் தெளிக்கலாம்.

நன்மைகள்

தேமோர்க் கரைசல் என்பது பயிர் வளர்ச்சி ஊக்கியாகப் பயன்படுகிறது.

பயிர்களில் பூ எடுக்கும் சமயத்தில் இக்கரைசலைத் தெளித்தால், பூக்கள் அதிகமாகப் பூக்கும்.

இக்கரைசல் தெளிக்கப்பட்டு விளைந்த காய்கறிகள் மிகவும் சுவையாக இருக்கும்.


அரப்பு மோர் கரைசல்

தேவையான பொருட்கள்

புளித்த மோர் – 5 லிட்டர்

இளநீர் – 1 லிட்டர்

அரப்பு இலைகள் – 1 முதல் 2 கிலோ

500 கிராம் பழ கழிவுகள் அல்லது பழ கழிவுகளில் இருந்து எடுக்கப்பட்ட 1 லிட்டர் சாறு.

தயாரிக்கும் முறை

அரப்பு இலைகளை நீருடன் சேர்த்து நன்கு அரைக்க வேண்டும்.

பின்னர் இதனுடன் புளித்த மோர், இளநீர் மற்றும் பழச்சாறு ஆகியவற்றை சேர்த்துக் கொள்ள வேண்டும்.

இந்தக் கரைசல் கலவையை மண்பானை அல்லது பிளாஸ்டிக் வாளியில் ஒருவார காலத்திற்கு வைத்திருக்க வேண்டும். இந்த ஒருவார காலத்தில் நொதிக்க தொடங்கி விடும். இந்த நொதித்த கரைசலே அரப்பு மோர் கரைசல் ஆகும்.

அரப்பு இலைத் தூள் பயன்படுத்துவதாக இருந்தால், பழ கலவைகளுக்கு பதிலாக பழ சாறு பயன்படுத்த வேண்டும். நான்கு பொருட்களையும் கலந்து அதனை ஏழு நாட்களுக்கு நொதிக்க விட வேண்டும்.

ஒரு லிட்டர் அரப்பு மோர் கரைசலுடன் 10 லிட்டர் தண்ணீர் கலந்து தெளிக்க வேண்டும்.

நன்மைகள்

அரப்பு மோர் கரைசல் தெளிப்பதால் பூச்சிகள் தாக்குதல் இருக்காது.

இது தாவர வளர்ச்சிக்கு உதவுகிறது மற்றும் பூஞ்சை நோய்களுக்கு எதிர்ப்பு தன்மை உருவாகிறது.

அரப்பு மோர் கரைசலை பூப் பிடிக்கும் பருவத்தில் தெளிப்பதால் பயிர் வளர்ச்சி வேகமாக காணப்படும். நிறையப்பூக்கள் பூக்கும்.

அரப்பு மோர் கரைசலில் ஜிப்ரலிக் அமிலம் என்ற வளர்ச்சி ஊக்கி உள்ளதால் பயிர்கள் குறைந்த காலத்தில் நன்கு வளர்ச்சியடைந்து, அதிக விளைச்சல் மற்றும் மகசூல் கிடைக்கும்.


மீன் கரைசல்

தேவையான பொருட்கள்

மீன் கழிவுகள் – 1 கிலோ

பனை வெல்லம் (அ) நாட்டு சர்க்கரை – 1 கிலோ

தயாரிக்கும் முறை

உணவுக்கு பயன்படாத மீன் கழிவுகளுடன் சம அளவு பனை வெல்லம் சேர்த்து கலக்க வேண்டும்.

இதனை ஒரு பிளாஸ்டிக் வாளியில் அல்லது டப்பாவில் போட்டு காற்று புகாமல் மூடி வைக்க வேண்டும்.

நாற்பது நாட்கள் கழித்து தேன் போன்ற நிறத்தில் ஒரு திரவம் வாளிக்குள் இருக்கும். மீன் கழிவுகள் அடியிலேயே தங்கியிருக்கும். இந்த திரவத்திலிருந்து கெட்டை வாடை வீசாது. பழவாடை வீசும். இப்படி பழவாடை வீசினால் மீன் அமினோ அமிலம் தயார் என்பதை தெரிந்து கொள்ளலாம்.

இவ்வாறு தயார் செய்யப்படும் மீன் அமினோ அமிலத்தை 200 மில்லி எடுத்து 10 லிட்டர் தண்ணிரில் கலந்து பயிர்களின் மேல் தெளிக்கலாம்.

ஒரு முறை தயார் செய்யப்படும் மீன் அமினோ அமிலத்தை 6 மாத காலம் வரை வைத்திருந்து பயன்படுத்தலாம். தேவைப்படும் போது மீன் அமினோ அமிலத்தை எடுத்துக் கொண்டு பிளாஸ்டிக் வாளியை காற்று புகாமல் மூடி வைத்து பாதுகாக்க வேண்டியது அவசியம்.

பயன்கள்

மீன் அமினோ அமிலம் ஒரு முக்கிய வளர்ச்சி ஊக்கியாக செயல்படும் தன்மை கொண்டது.

தழைச்சத்துக்கு யூரியாவை பயன்படுத்துவதற்கு பதிலாக இந்த அமிலத்தை பயன்படுத்தலாம்.

மீன் அமினோ அமிலத்தை பூக்கும் தருணத்தில் பயன்படுத்தும் போது பூக்கள் நன்றாக பூக்கும் மற்றும் காய்க்கும் திறன் அதிகரிக்கும். இந்த அமிலம் சுற்றுச்சூழலுக்கு எந்த விதமான பாதிப்புகளையோ, பக்கவிளைவுகளையோ ஏற்படுத்துவது கிடையாது.


E.M. என்னும் திற நுண்ணுயிரி

தேவையான பொருட்கள்

Effective Microorganisms என்பதின் சுருக்கமே E.M. ஜப்பான் நாட்டில் 1980களில் அறிமுகப்படுத்தப்பட்டது இந்த திற நுண்ணுயிரி. இன்று 120 நாடுகளில் விவசாயம், சுற்றுச்சூழல், கால்நடைப் பராமரிப்பு துறைகளில் பயன்படுகிறது. இது இயற்கை இடுபொருள் என Ecocert அமைப்பு சான்று தந்துள்ளது.

வகைகள்

E.M 1 திற நுண்ணுயிரி

E.M 2 திற நுண்ணுயிரி

E.M 1 திற நுண்ணுயிரி

E.M 1 என்பது உறங்கும் நிலையிலுள்ள நன்மை செய்யும் நுண்ணுயிர்களின் தொகுப்பாகும். இது நொதித்த பிறகே பயன்படுத்தப்பட வேண்டும்.

E.M 2 திற நுண்ணுயிரி

E.M 2 தயார் செய்ய 1:1:20 என்ற விகிதத்தில் E.M 1 : வெல்லம்(அ)கரும்புச் சர்க்கரை: குளோரின் கலக்காத நீர் ஆகியவற்றை 5-10 நாட்கள் பிளாஸ்டிக் கலன்களில் காற்று புகாமல் நிழலில் வைக்க வேண்டும்.

இவ்வாறு வைக்கப்பட்ட கரைசல் நொதிக்க ஆரம்பிக்கும். உருவாகும் வாயுவை வெளியேற்ற தினமும் 1 நொடி மூடியை திறந்து மூட வேண்டும். இந்த கரைசலே E.M 2 ஆகும். நொதிக்க வைக்க கண்ணாடிக் கலன்களை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.

நன்மைகள்

இக்கரைசலை ஒரு மாத காலத்திற்குள் பயன்படுத்திவிட வேண்டும். வீட்டின் சமையலறை, குளியலறை போன்ற இடங்களிலும் E.M 2 கரைசலை உபயோகப்படுத்தலாம். இவ்விடங்கள் விரைவாக உலர்ந்து, ஈரமின்றி இருப்பதுடன் ஈக்களும் வராது. துர்வாசனையும் நீங்கும்.

இது மிகச்சிறந்த இயற்கை ஈடுபொருள். கழிவுகளை இதனை கொண்டு மக்கச் செய்து மறுசுழற்சி செய்யலாம்.

தாவர வேர்களில் ஒட்டிக்கொண்டு வேரையும், மண்ணையும் இணைத்து மண்ணிலுள்ள பாஸ்பரஸை நேரடியாகவும், மறைமுகமாக மற்ற சத்துகளையும், நீரையும் எளிதாக உறிஞ்சி தாவரங்களுக்கு தரவல்லது. இது வேர்களை அதிக அளவில் உண்டாக்குவதால் விளைச்சல் அதிகரிக்க உதவுகிறது.

மண்ணிலுள்ள நோய் உண்டாக்கும் பாக்டீரியா மற்றும் பூஞ்சை ஆகியவை தாவரங்களை தாக்காமல் பாதுகாக்கிறது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow