தண்டுக்கீரை சாகுபடி முறை மற்றும் பயன்கள்
தண்டுக்கீரையானது கீரைக் குடும்பத்தைச் சேர்ந்தது. மிகவும் அதிகமாகப் பயன்படுத்தப்படும் கீரைகளில் தண்டுக்கீரை ஒன்று.
தண்டுக்கீரையின் இலைகள், தண்டுகள் ஆகிய அனைத்துப் பகுதிகளும் உணவாகப் பயன்படுத்தப்படுகிறது.
செழிப்பான பகுதிகளில் ஓர் ஆள் உயரம் வரை வளரக் கூடியது.
எப்படி பயிரிடுவது…?
பருவம்
சித்திரை, ஆடி, மார்கழி, மாசிப்பட்டங்கள் ஏற்றவை.
மண்
நல்ல மண்ணும், மணலும் கலந்த அமிலத்தன்மை கொண்ட இருமண் பாட்டு நிலம், செம்மண் நிலம் உகந்தது. அதிக களிமண் கொண்ட நிலத்தை தவிர்க்கவேண்டும்.
விதையளவு
ஒரு எக்டருக்கு 2.5 கிலோ விதைகள் தேவைப்படும்.
நிலம் தயாரித்தல்
தேர்வு செய்த நிலத்தில் ஏக்கருக்கு 5 டன் தொழு உரம், 4 டன் எருவைக் கலந்து பரவலாகக் கொட்டி உழவு செய்து மண்ணை சமன்படுத்திக் கொள்ள வேண்டும். பிறகு நீர் பாய்ச்சுவதற்கு ஏற்றவாறு தேவையான அளவுகளில் பாத்திகள் அமைக்க வேண்டும்.
விதைத்தல்
கீரை விதைகளோடு மணல் கலந்து பாத்திகளில் தூவி விட வேண்டும். அப்பொழுது தான் விதைகள் சீராக விழுந்து முளைக்கும். பின் கையால் கிளறி பாசனம் செய்ய வேண்டும்.
நீர் நிர்வாகம்
விதைகள் விதைத்தவுடன் நீர்ப்பாய்ச்ச வேண்டும். விதைகள் ஒரு பக்கமாக அடித்துச் செல்லாமல் இருக்க பூவாளியால் நீர் பாய்ச்ச வேண்டும். விதைத்த மூன்றாம் நாள் உயிர்த் தண்ணீர் பாய்ச்ச வேண்டும்.
உரங்கள்
ஜீவாமிர்தக் கரைசலை 7 நாட்கள் இடைவெளியில் இரண்டு முறை பாசன நீரில் கலந்து விடவேண்டும். இதனால் கீரைகளின் வளர்ச்சி சீராக இருக்கும்.
பாதுகாப்பு முறைகள்
களை நிர்வாகம்
ஒரு வார காலத்தில் விதைகள் முளைக்க ஆரம்பிக்கும். களைகளால் கீரைகளின் வளர்ச்சி பாதிக்கப்படும். எனவே 10 – 15 நாட்கள் கழித்து களை எடுக்க வேண்டும். பயிரின் எண்ணிக்கையைப் பொறுத்து பயிர் களைதல் வேண்டும்.
பயிர் பாதுகாப்பு
கீரைகளில் பூச்சிகள் தாக்குதல் காணப்பட்டால் இஞ்சி, பூண்டு கரைசலை தெளிக்க வேண்டும். இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் மூன்றையும் சம அளவில் எடுத்து, இடித்து ஒரு லிட்டர் மாட்டுச் சிறுநீரில் கலந்து 10 லிட்டர் தண்ணீருக்கு 300 மில்லி கரைசல் என்ற விகிதத்தில் கலந்து, 10 நாட்களுக்கு ஒரு முறை அதிகாலை வேளையில் தெளிக்க வேண்டும். இதனால் பூச்சி தாக்குதல் கட்டுப்படுத்தப்படும்.
அறுவடை
35 முதல் 40 நாட்களில் நாட்களில் கீரைகள் அறுவடைக்கு தயார் ஆகிவிடும்.
பயன்கள்
- இந்தக் கீரையில் இரும்புச்சத்து, கால்சியம், பாஸ்பரஸ், வைட்டமின் பி, சி, நார்சத்து ஆகியவை அதிகமாக உள்ளன.
- குடல் புண், அல்சர் உள்ளவர்கள் இந்தக் கீரையை மசியலோ அல்லது லேசாக வதக்கியோ உணவுடன் எடுத்துக் கொள்வது நல்லது.,
- பெண்களின் கர்பப்பை பிரச்சனைகளுக்கு இந்தக் கீரை மிகவும் நல்லது.
- இது உடலுக்கு குளிர்ச்சி அளிக்கிறது. இதனை மூல நோய் உள்ளவர்கள் உணவுடன் எடுத்துக் கொள்ளலாம்.
What's Your Reaction?