சூரியகாந்தி சாகுபடி முறை மற்றும் பயன்கள்
சூரியகாந்தி மத்திய அமெரிக்க நாடுகளை தாயகமாக கொண்ட தாவரமாகும். இவை மிகப்பெரிய பூங்கொத்தை உடையவை.
சூரியகாந்தி குறைந்தது கி.மு 2600 ஆண்டுகள் அளவில் முதன்முதலில் மெக்சிகோவில் பயிரிடப்பட்டது.
18 ஆம் நூற்றாண்டின் போது, ஐரோப்பாவில், குறிப்பாக ரஷ்யன் பழமைவாத தேவாலய உறுப்பினர்களுடன், சூரியகாந்தி எண்ணெயின் பயன்பாடானது மிகவும் பிரபலமாகியது, ஏனெனில் தவக்காலத்தின் போது தடை செய்யாத சில எண்ணெய்களில் சூரியகாந்தி எண்ணெயும் ஒன்றாக இருந்தது.
சூரியகாந்தியின் விதைகளிலிருந்து பிரித்தெடுக்கப்படும் சூரியகாந்தி எண்ணெய் சமையலுக்குப் பயன்படுகிறது.
எப்படி பயிரிடுவது…?
இரகங்கள் :
கோ.4, மார்டன், கே.பி.எஸ்.எச்.1, கே.பி.எஸ்.எச்.44, டி.சி.எஸ்.எச்.1, எம்.எஸ்.எப்.எச்.17, பி.ஏ.பி.1091, பி.ஏ.சி.1091, கோ.எஸ்.எக்-2, சன்பிரிடு ஆகிய இரகங்கள் சாகுபடிக்கு ஏற்றவை.
பருவம்
மானாவாரியாக பயிரிட ஆடி, கார்த்திகை பட்டமும், இறவையில் பயிரிட மார்கழி, சித்திரைப் பட்டமும் ஏற்றது.
மண்
நல்ல வடிகால் வசதியுள்ள எல்லா மண் வகையும் சூரியகாந்தி சாகுபடிக்கு ஏற்றது. கரிசல் பூமியில் நன்றாக வளர்ந்து அதிக மகசூல் கொடுக்க கூடியது.
நிலம் தயாரித்தல்
சாகுபடி நிலங்களை 2 முதல் 3 முறை நன்கு உழவு செய்ய வேண்டும். கடைசி உழவின்போது, ஒரு ஏக்கருக்கு 5 டன் மக்கிய தொழுஉரம் இட்டு மண் கட்டிகள் நன்கு உடையுமாறு உழவு செய்ய வேண்டும்.
விதையளவு
மானாவாரி நிலங்களில் ஏக்கருக்கு 7 கிலோவும், இறவை நிலங்களில் ஏக்கருக்கு 6 கிலோ விதையும் தேவைப்படும்.
விதைநேர்த்தி
விதைகளை சிங்க் சல்பேட் 2 % கரைசலில் 12 மணிநேரம் ஊறவைத்து நிழலில் உலர்த்திய பின்னர் விதைப்பு செய்யலாம் அல்லது கார்பன்டாசிம் 2 கிராம் அல்லது டிரைகோடர்மா விரிடி 4 கிராம் ஒரு கிலோ விதையுடன் கலந்து 24 மணி நேரம், கழித்து விதைப்பு செய்ய வேண்டும். விதைநேர்த்தி செய்யப்பட்ட விதைகளை 15 நிமிடம் உலர்த்தி, உடனடியாக விதைக்க வேண்டும்.
விதைத்தல்
சூரியகாந்தி விதைகளை மானாவாரியில் உழுத பின் தகுந்த இடைவெளியில் அதாவது வரிசைக்கு வரிசை 45 செ.மீ, செடிக்கு செடி 30 செ.மீ என்ற இடைவெளியில் குழிக்கு 2 விதைகள் வீதம் 3 செ.மீ ஆழத்தில் ஊன்ற வேண்டும். பின்பு 10-ஆம் நாள் செழிப்பாக உள்ள ஒரு செடியை விட்டு, மற்ற செடிகளை களைத்து விட வேண்டும்.
நீர் நிர்வாகம்
விதைத்தவுடன் நீர் விட வேண்டும். பின்பு உயிர்த்தண்ணீர் 7ம் நாள் விட வேண்டும். மொட்டு பிடிக்கும் பருவத்தில் ஒரு முறை தண்ணீர் விட வேண்டும். பூ பிடிக்கும் தருணத்தில் இரண்டு முறை தண்ணீர் விட வேண்டும். பின்பு விதைப் பிடிக்கும் தருணத்தில் இரண்டு முறை தண்ணீர் விட வேண்டும்.
உரங்கள்
இறவையில் தழைச்சத்து 60 கிலோ, மணிச்சத்து 30 கிலோ, சாம்பல் சத்து 30 கிலோ ஆகியவற்றை அடியுரமாக இட வேண்டும். மானாவாரியில் தழைச்சத்து 40 கிலோ, மணிச்சத்து 50 கிலோ, சாம்பல் சத்து 40 கிலோ ஆகியவற்றை அடியுரமாக இட வேண்டும்.
12.5 கிலோ நுண்ணூட்டக் கலவையை 40 கிலோ மணலுடன் கலந்து விதைகளை விதைக்கு முன் வயலில் இட்டு பின்னர் விதைப்பு செய்ய வேண்டும்.
வளர்ச்சி ஊக்கிகள்
சூரியகாந்தி பூக்களில் விதைகள் அதிக அளவில் கிடைக்க விதைத்த 30 மற்றும் 60வது நாளில் பிளோனோபிக்ஸ் பயிர் ஊக்கி 280 கிராமுடன் 250 லிட்டர் தண்ணீர் சேர்த்து தெளிக்க வேண்டும்.
சூரியகாந்தி பூவில் அதிக பூக்கள் பிடிக்க மகரந்த சேர்க்கை மிகவும் முக்கியமானதாகும். ஏக்கருக்கு 2 தேனி பெட்டிகள் வைத்து தேனி வளர்ப்பதால் மகரந்த சேர்க்கை அதிகரித்து மணிகள் அதிகரிக்கும்.
பாதுகாப்பு முறைகள்
களை நிர்வாகம்
ஒரு எக்டருக்கு ப்ளுக்ளோரலின் அல்லது பென்டிமெத்தலின் 2 லிட்டர் தெளித்த பின் நீர்ப்பாய்ச்ச வேண்டும். களைக்கொல்லி இட்டபின் 30 – 35 நாளில் ஒரு கைக்களை எடுக்க வேண்டும்.
பயிர் பாதுகாப்பு
கம்பளிப் பூச்சி
கம்பளிப் பூச்சியை கட்டுப்படுத்த ஒரு எக்டருக்கு பேசலோன் 35 கிகி 1000 மிலி என்ற அளவில் தெளிக்க வேண்டும்.
புகையிலைப் புழு
புகையிலைப் புழுவை கட்டுப்படுத்த குளோரிபைரிபாஸ் (அ) குயினைல்பாஸ் 2 மிலி மருந்தை ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும்.
இலைத்தத்துப்பூச்சி
ஒரு எக்டருக்கு மித்தைல் டெமட்டான் 650 மிலி மருந்தை, 600 லிட்டர் நீரில் கலந்து தெளிக்க வேண்டும்.
துருநோய்
துருநோயை கட்டுப்படுத்த பூசண கொல்லியான மேங்கோசெப் அல்லது சினெப் 0.2 – 0.3 சதவிகிதம், ஒரு லிட்டர் நீரில் கலந்து 2-3 முறை தெளிக்க வேண்டும்.
அறுவடை
சூரியகாந்தி பூக்கள் அறுவடைக்குத் தயார் ஆவதை பூவின் பின்பாகம், இதழ்கள் மஞ்சளாக மாறி இருப்பதை வைத்து அறிந்து கொள்ளலாம். அறுவடை செய்தவுடன் 3 நாட்களுக்கு வெயிலில் பூக்களை காயவைக்க வேண்டும்.
அந்த பூக்களை 3 மணி நேரத்திற்கு ஒருமுறை கிளறி விட வேண்டும். அதன்பின் குச்சி மூலம் பூக்களை தட்டினால் விதைகள் உதிர்ந்து விடும். விதைகளை மட்டும் சேகரித்து அவற்றை மீண்டும் வெயிலில் காய வைக்க வேண்டும். 9 சதவீதம் ஈரப்பதம் இருக்குமாறு விதைகளை சேமித்து வைக்க வேண்டும்.
மகசூல்
ஒரு எக்டருக்கு 1,000 முதல் 1,100 கிலோ விதைகள் கிடைக்கும்.
சூரியகாந்தி பயிரை தாக்கும் நோய்கள் மற்றும் அதன் மேலாண்மை:
அடிச்சாம்பல் நோய்: (பிலாஸ்போஃபோரா ஷீலியாந்தி):
அறிகுறிகள்:
ஈரத்தினால் அழுகல், உள்பரவிய பாதிப்புகள், இலைகளில் புள்ளிகள், வேர்களிலும், தண்டிலும் மறு கொப்புளம் / முடிச்சு தோன்றல் – இவையாவும் அடிச்சாம்பல் நோய் அறிகுறிகள்.
முளைக்காம்பில் உள்ள இலைகள் பழுப்பு நிறத்தில் காணப்படும்.
செடிக் குட்டைப் படுதல், இலைகள் பழுத்தல், ஊடுருவிய / உட்பிரவிய பாதிப்புகள் காணப்படும்.
பாதிக்கப்பட்ட செடிகளின் இலைகளில் பச்சை மற்றும் மஞ்சள் பலவண்ண புள்ளியமைவு ஏற்படும்.
தண்டு எளிதில் உடைந்து விடும்.
இளம் நாற்றுகளில் வெள்ளை பூஞ்சான் பரவும் (அதிக ஈரப்பதம் கொண்ட நாட்களில் காணலாம்).
கிளைவேர்கள் குறையும்.
பூக்கள் பாதிக்கப்பட்டு மலட்டுத் தன்மையடைந்துவிடும்.
முதிர் செடிகளில் இந்நோய் அறிகுறி, பூக்கள் பூத்தபின்பு தான் தோன்றும்.
கீழ் பகுதிகளில் பூஞ்சான் வளர்ச்சி காணப்படும்.
கட்டுப்படுத்தும் முறைகள்:
எதிர்ப்பு சக்தி கொண்ட பயிர்களை தேர்ந்தெடுத்து நடவேண்டும்.
பாதிக்கப்பட்ட பயிர்கள் மற்றும் அதன் பாகங்கள் இல்லாத பாதுகாப்பான இடத்தில் பயிரிடுதல் நன்று.
ஆல்ட்டர்நேரியா கருகல் நோய்:
அறிகுறிகள்:
அடர் அரக்கு / கருப்பு நிறத்து நீள் வட்ட வடிவமுடைய புள்ளிகள் இலைகளில் தோன்றும்.
புள்ளிகளைச் சுற்றியுள்ள பகுதி மஞ்சள் நிறத்தில் காணப்படும். சாம்பல் நிற நடுப்பகுதி தோன்றும்.
இலைகளில் தோன்றிய புள்ளிகள் தண்டு, பூக்கள் மற்றும் காம்புகளுக்குப் பரவும்.
தடுப்பு முறைகள்:
எதிர்ப்புத்திறன் கொண்ட பயிர் வகைகள் – இ.சி. 132846, இ.சி. 132847, இ.சி.132361, இ.சி.126184.
பயிர் விதைக்கும் நேரம், இடம், காலம் ஆகியவற்றை கவனமாக தேர்ந்தெடுத்தால் இந்நோயைத் தவிர்க்கலாம்.
சாம்பல் நோய்: (எரிசிஃபே சிக்கோரேசியம்):
அறிகுறிகள்:
பூவடிச் சிற்றிலை மற்றும் தண்டுகளில் இதன் அறிகுறிகள் காணப்படும்.
சாம்பல் / வெள்ளை நிற புள்ளிகள் அதிகரிக்கும்.
கறுப்பு நிற ஊசி முனை போன்ற பூஞ்சான் வளர்ச்சி, சாம்பல் நிற புள்ளிகளிலிருந்து தோன்றும்.
இந்நோய் அதிக இழப்பை ஏற்படுத்தாது.
தடுப்புமுறை:
பாதிக்கப்பட்ட பயிர்கள் மற்றும் பிற பயிர் கழிவுகளை அகற்றிடல் வேண்டும்.
ரைசோஃபஸ் தலைப்பாக அழுகல் நோய்:
அறிகுறிகள்:
மலர் முதிர்ச்சியடையும் பொழுது, சிறிய அழுகல் போன்ற புள்ளிகள், மலரின் பின்புறம், தண்டுவடத்திற்குப் பக்கத்தில் தோன்றும்.
இப்புள்ளிகள் பெரிதாகி, மென் அழுகல் ஏற்படும் அவ்விடத்திலிருந்து பூஞசான் வளர்ச்சி காணப்படும்.
பின்னர் மலர் தண்டு அழுகி, பூவின் தலை தொங்கி விடும்.
இவ்வாறு பாதிக்கப்பட்ட மலரிலிருந்து எடுக்கப்படும் வித்துக்கள் கசப்பு சுவையுடன் இருக்கும்.
தடுப்பு முறைகள்:
பூச்சிக்கொல்லி மற்றும் பூஞ்சான் கொல்லி மருந்துகளைத் தெளிக்க வேண்டும்.
பூவில் காணம் படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
சூரிய காந்தியின் நச்சுயிரி நோய்கள்:
சூரியகாந்தி பல்வண்ண (தேமல்) நச்சுயிரி:
அறிகுறிகள்:
பழுப்பு நிற தேமல் வட்ட வடிவில் காணப்படும்.
செடிகள் வளர்ச்சி குன்றி காணப்படும். மேலும் பூக்கள் உருக்குலைந்தும் விதைகள் சிறுத்தும் காணப்படும்.
தாவரச் சாற்றின் மூலமாகவும் அசுவுணிப்பூச்சி மூலமாகவும் இந்நச்சுயிரி பரவுகிறது.
இலைகள் சுருங்கி சிறிய குவளை போன்று உருமாறும்.
முக்கிய நோய் பரப்பும் உயிரிகள் – ஏஃபிஸ் கோசிப்பி, ஏஃபிஸ் மால்வே.
மஞ்சள் தேமல் நோய்:
அறிகுறிகள்:
மஞ்சள் நிற வளையம் போன்ற வடிவ தேமல் இலைகளில் தோன்றும்.
தாவரச் சாறு ஒட்டுக்கட்டுதல் போன்றவற்றால் இந்நச்சுயிரி பரவும்.
மஞ்சள் நிற பொட்டு நோய்:
மஞ்சள் நிற கொப்புளம / பொட்டு போன்று இலைகளில் தோன்றும்.
இலைகள் சுருக்கத்துடன் காணப்படும்.
இலைகளில் 1-3 செ.மீ அளவு மஞ்சள் நிற வட்டங்கள் காணப்படும்.
இலைநரம்புகள் மஞ்சள் நிறத்தில் இருக்கும்.
இளம் இலைகள், சிறுத்து சுருங்கிக் காணப்படும்.
இலை சுருங்கும் நோய்:
சுருங்கிய இலைகளில் மஞ்சள் நிற கொப்புளம் / பொட்டு போன்று அறிகுறிகள் தோன்றும்.
நச்சுயிரி நோய்களின் மேலாண்மை முறைகள்:
சூரியகாந்தி பயிரில் நச்சுயிரிகளின் தாக்குதலைக் கட்டுப்படுத்த நேர் வழிமுறைகள் குறைவே.
பயிர் நடுதலுக்கு முன்பு களைச் செடி மற்றும் முந்தய அறுவடையின் மீதங்களை அகற்ற வேண்டும்.
நோய் பரப்பும் அசுவுணிப் பூச்சியை, பூச்சிக்கொல்லி கொண்டு அழிக்கலாம்.
பாரம்பரிய முறை:
உழுதல், நிலத்தை கலப்பை கொண்டு கிளருதல், வித்திடும் நேரம், நிலத்தில் உள்ள ஊட்டச்சத்து மேலாண்மை, நீர் பாய்ச்சல் இவையனைத்தும் நல்ல முறையில் பின்பற்றினால் நோய் பரவாமல் தடுக்கலாம்.
பயிர்சுழற்சி பின்பற்ற வேண்டும்.
சரியான நேரத்தில் விதைத்தல், பயிர்சுழற்சி, ஊடுபயிர் நடுதல், சரியான நீர் பாசனம் இவற்றை பின்பற்ற வேண்டும்.
உயிரியல் முறை:
டிரைக்கோடெர்மா, கிலோகிலேடியம் – இவை பூஞ்சான் தாக்குதலைக் குறைக்கும்.
வேம்பு எண்ணெய், வேப்பங்கொட்டைச் சாறு பயன்படுத்தலாம்.
‘வாம்’ எனும் வெளி வேர் பூசணத்தை உபயோகிக்கலாம்.
பயன்கள்
- இதயம் தொடர்பான நோய்கள் மற்றும் இரத்த அழுத்தம் போன்ற நோய்களையும் சூரியகாந்தி விதைகள் கட்டுப்படுத்துகின்றன.
- நீரிழிவு மற்றும் புற்றுநோய்களை கட்டுப்படுத்துகிறது. ஆஸ்துமா தொடர்பான நோய்களையும் குணப்படுத்தும் தன்மை கொண்டவை.
- இதன் விதைகளில் இருந்து எடுக்கப்படும் எண்ணெயை உபயோகிப்பதன் மூலம் பக்கவாத நோய் தாக்குதலும், சிறுநீரகத்தில் கல் உருவாவதும் தடுக்கப்படுகிறது.
- இதில் உள்ள வைட்டமின் ஈ உயிர்சத்தும், ஆன்டி ஆக்சிடண்டும், உடல் மற்றும் தசை வளர்ச்சிக்கு உதவுகின்றன.
- காற்று குழாய், பேச்சுக்குழாய், மற்றும் நுரையீரல் பாதிப்புகளை குணப்படுத்துகிறது. இதன் எண்ணெய் அதிக கொழுப்புச்சத்தை குறைக்கும்.
- சூரியகாந்தி விதையில் காணப்படும் மெக்னீசியம் நரம்பு செல்களை பாதுகாப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
What's Your Reaction?