சணல் சாகுபடி முறை மற்றும் பயன்கள்

Jul 27, 2023 - 00:00
 0  92
சணல் சாகுபடி முறை மற்றும் பயன்கள்

சணல் – இதன் தாயகம் ஆப்ரிக்கா என்று கூறப்படுகிறது. இது பாரம்பரிய கோர்கோருஸ் டிலாசியே குடும்பத்தைச் சேர்ந்த தாவரமாகும்.

பண்டைய காலத்திலேயே சணல் உற்பத்தி செய்து பயன்படுத்தி வந்துள்ளனர். ஆப்பிரிக்கா மற்றும் ஆசிய கண்டத்திலேயே சணல் அதிகமாக பயிரிடப்பட்டுள்ளது. ஆங்கிலேயர்கள் கட்டுப்பாட்டில் இந்தியா இருந்த பொழுது சணல் வர்த்தகத்தை முதன்மையாக வைத்திருந்தனர்.

இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் சணலை குறைந்த விலைக்கு கொள்முதல் செய்து இங்கிலாந்தில் அதிக விலைக்கு விற்று வந்தனர்.

எப்படி பயிரிடுவது…?

இரகங்கள்

ஒலிட்டோரியல் சணல் – ஜே.ஆர்.ஓ 524, 878, 7835, கேப்சுலாரிஸ் சணல் – ஜே.ஆர்.சி 212,321,7447 ஆகிய இரகங்கள் சாகுபடி செய்ய ஏற்ற இரகங்கள் ஆகும்.

பருவம்

மாசி – வைகாசி மாதங்கள் ஏற்ற பருவம் ஆகும்.

மண்

மணல் கலந்த வண்டல் மற்றும் களிமண் வகைகள் சாகுபடிக்கு ஏற்றது. கேப்சுலாரில் சணல் வகை நீர் தேங்கும் நன்செய் நிலங்களிலும் வளரக்கூடியது. ஆனால் ஒலிட்டோரியல் சணல் வகை நீர் தேங்கும் பகுதிகளில் வளராது.

விதையளவு

எக்டருக்கு வரிசை விதைப்பு முறையில் ஒலிட்டோரியல் 5 கிலோ, கேப்சுலாரிஸ் 7 கிலோ தேவைப்படும். தெளிப்பு முறையில் ஒலிட்டோரியல் 7 கிலோ, கேப்சுலாரிஸ் 10 கிலோ தேவைப்படும்.

நிலம் தயாரித்தல்

நிலத்தை இரண்டு அல்லது மூன்று முறை மடக்கி உழவு செய்ய வேண்டும். கடைசி உழவின் போது ஐந்து டன் மக்கிய தொழு உரம் இட்டு உழவு செய்ய வேண்டும். எக்டருக்கு 20 கிராம் தழைச்சத்து, மணிச்சத்து மற்றும் சாம்பல் சத்துக்களை அடியுரமாக இடவேண்டும். நீர் பாய்ச்சுவதற்கு ஏற்ப பாத்திகள் அமைத்துக் கொள்ள வேண்டும்.

விதைத்தல்

ஒலிட்டோரியல் இரகங்களுக்கு 25 x 5 செ.மீ இடைவெளியும், கேப்சுலாரிஸ் இரகங்களுக்கு 30 x 5 செ.மீ இடைவெளியும் விட்டு வரிசை விதைப்பு முறை அல்லது தெளிப்பு முறையில் விதைக்க வேண்டும்.

நீர் நிர்வாகம்

விதைத்தவுடன் தண்ணீர் பாய்ச்ச வேண்டும். பின்பு மூன்றாம் நாள் உயிர்த்தண்ணீர் பாய்ச்ச வேண்டும். அதன்பின் நான்கு நாட்களுக்கு ஒருமுறை நீர் பாய்ச்ச வேண்டும்.

உரங்கள்

ஒவ்வொரு முறையும் களை எடுத்த பின்பு அல்லது 20-25 நாட்கள் மற்றும் 35-40 நாட்களில் 10 கிலோ தழைச்சத்தை மேலுரமாக இடவேண்டும். வறட்சியான காலங்களில் 8 கிலோ யூரியாவை 2 சத கரைசலாக ஒரு லிட்டருக்கு 20 கிராம் என்ற அளவில் 40-45 நாளிலும் மற்றும் 70-75 நாளிலும் தெளிக்கலாம்.

பாதுகாப்பு முறைகள்

களை நிர்வாகம்

விதைத்த 20-25 நாட்களில் ஒரு முறையும், 35-40 நாட்களில் ஒரு முறையும் களை எடுக்க வேண்டும். இல்லையெனில் புளுகுளோரலின் களைக்கொல்லியை ஒரு எக்டருக்கு 1.5 கிலோ என்ற அளவில் விதைத்த மூன்றாம் நாள் தெளித்து, உடனே நீர்ப்பாய்ச்சவேண்டும். இதைத் தொடர்ந்து 30-35 நாட்களில் ஒரு கைக்களை எடுத்தால் போதுமானது.

பயிர் பாதுகாப்பு

இதில் பெரும்பாலும் நோய் தாக்குதல் காணப்படுவது இல்லை.

அறுவடை

சணல் சாதாரணமாக 100 – 110 நாட்களில் அறுவடைக்கு வரும். நமது தேவைக்கேற்ப 135 நாட்கள் கழித்தும் அறுவடை செய்யலாம். அறுவடை செய்யப்பட்ட சணல் செடிகள் வயலில் 3-4 நாட்கள் பரப்பப்பட்டு இலைகளை உதிர்த்தி வைக்க வேண்டும். அதன் பிறகு மெல்லிய மற்றும் உருண்ட தண்டுகள் தனியாக பிரிக்கப்பட்டு கத்தைகளாக கட்ட வேண்டும்.

மகசூல்

ஒரு எக்டரில் கிடைக்கும் செடிகள் 45-50 டன்கள் வரை எடை உள்ளது. இதிலிருந்து எக்டருக்கு சுமார் 20-25 டன் சணல் கிடைக்கும்.

பயன்கள்
  • சணல் மூலம் செய்யப்படும் பைகள் எளிதில் மக்கும் தன்மை கொண்டவை. எனவே பிளாஸ்டிக் பைகளுக்கு பதிலாக சணல் பைகளை உபயோகிக்கலாம்.
  • சணல் முக்கியமாக கச்சா பருத்தியின் பேல்களை உருட்டி மடக்கவும், சாக்குப் பைகள் மற்றும் துணி உற்பத்திச் செய்யவும், கரடுமுரடான துணிகளைத் தயாரிக்கவும் பயன்படுத்தப்படுகிறது.
  • இதன் இழைகள் திரைச்சீலைகள், நாற்காலி உறைகள், தரை விரிப்புகள், தள விரிப்புகள், ஹெஸ்ஸியன் துணிகள் நெய்யப் பயன்படுகிறது.
  • இழைகள் தனியாகவோ அல்லது இதர வகை இழைகளுடனோ இணைத்து கடுநூலையும், கயிறையும் செய்யப் பயன்படுத்தப்படுகிறது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow