குழிப்பேரி (peach) சாகுபடி முறை மற்றும் பயன்கள்

Feb 12, 2023 - 00:00
 0  62
குழிப்பேரி (peach) சாகுபடி முறை மற்றும் பயன்கள்

குழிப்பேரி சீனாவைப் பிறப்பிடமாகக் கொண்ட தாவரமாகும்.

இது இனிப்பு செறிந்த பழங்களை விளைவிக்கிறது.

இப்பழம் ஆப்பிள் பழத்தினை ஒத்த தோற்றத்தையும், குணத்தையும் கொண்ட பழமாகும்.

குளிர் காலத்தில் பெரும்பாலான நாடுகளில் பயிரிடப்படுகிறது.

பீச் பழங்கள், ஸ்டோன் பழங்கள் எனவும் அழைக்கப்படுகின்றன.

எப்படி பயிரிடுவது…?

இரகங்கள் :

முன்பருவ இரகங்கள் : கில்லி கிராக்கி மற்றும் ப்ளோரிடாஷன்

இடைக்கால இரகங்கள் : ஷாபசந்த்

பின்பருவ இரகங்கள் : சிகப்பு ஷாங்காய்

பருவம்

முன்பருவ இரகங்கள் : ஏப்ரல் – மே

இடைக்கால இரகங்கள் : ஜீன் – ஜீலை

பின்பருவ இரகங்கள் : ஜீலை – ஆகஸ்ட் ஆகிய மாதங்களில் நடவு செய்யலாம்.

மண்

நல்ல வடிகால் வசதி கொண்ட செம்மண் நிலம் சாகுபடிக்கு உகந்தது. மண்ணின் கார அமிலத்தன்மை 5.8 முதல் 6.2 வரை இருத்தல் வேண்டும்.

நிலம் தயாரித்தல்

சாகுபடி செய்யும் நிலத்தை நன்கு உழவு செய்ய வேண்டும். பின்பு 60 x 60 x 60 செ.மீ. ஆழம், அகலம், உயரம் என்ற அளவுள்ள குழிகளை எடுக்க வேண்டும். அதில் தொழு உரம் மற்றும் மேல்மண் கலந்து இட்டு குழிகளை ஆற போட வேண்டும்.

விதை

மொட்டுக்கட்டுதல், ஒட்டுக்கட்டுதல் மூலமாகப் பயிர்ப்பெருக்கம் செய்யப்படுகின்றது. மொட்டுக்கட்டிய அல்லது ஒட்டுக்கட்டிய ஒரு ஆண்டு நாற்றுகள் நடுவதற்கு ஏற்றவை.

விதைத்தல்

4 x 4 மீ இடைவெளியில் ஒட்டுக்கட்டிய நாற்றுகளை குழியின் மையத்தில் நடவு செய்ய வேண்டும்.

நீர் நிர்வாகம்

நட்டவுடன் நீர் பாய்ச்ச வேண்டும். பின்பு வாரம் ஒருமுறை நீர் பாய்ச்ச வேண்டும். காய்ப்பு பொதுவாக மார்ச் மாதத்தில் ஆரம்பித்து பின் ஏப்ரல் – ஜீன் வரை இருக்கும். இரகங்களைப் பொறுத்து ஜீலை – செப்டம்பர் மாதம் வரை காய்களை அறுவடை செய்யலாம். எனவே இந்த சமயத்தில் நீர்ப்பாசனம் என்பது மிக முக்கியமானதாகும். பழங்கள் அறுவடைக்குத் தயாராவதற்கு 25 முதல் 30 நாட்கள் வரை நீர்ப்பாசனம் அவசியமாகும்.

உரங்கள்

காய்க்கும் மரம் ஒன்றிற்கு 25 கிலோ நன்கு மக்கிய தொழு உரம், 500 கிராம் தழைச்சத்து, ஒரு கிலோ மணி மற்றும் சாம்பல் சத்துக்களை அளிக்கவேண்டும். இதையே இரண்டாக பிரித்து கவாத்து செய்தபின் அளிக்க வேண்டும்.

பாதுகாப்பு முறைகள்

களை நிர்வாகம்

கோடை, மழைக்காலங்களில் பீச் தோட்டங்களில் அதிகமான களைகள் வர வாய்ப்புள்ளது. டையூரான் (எக்டருக்கு 2 கிலோ) அல்லது கிளைபோசேட் அல்லது கிரமாக்சோன் எக்டருக்கு 1.5 முதல் 2 லிட்டர் என்ற அளவில் தெளிப்பதன் மூலம் களைகளைக் கட்டுப்படுத்தலாம். களைகள் வளர்வதற்கு முன் மார்ச் முதல் வாரத்தில் டையூரானும் வளர்ந்த பின் கிளைபோசேட், கிரமாக்சோனையும் தெளிக்கலாம்.

கவாத்து செய்வதற்கு ஜனவரி மாதம் சிறந்தது. கவாத்து செய்தவுடன் வெட்டிய இடங்களில் காப்பர் ஆக்ஸிகுளோரைடு என்ற பூஞ்சாணக் கொல்லி மருந்து கலவையைத் தடவ வேண்டும்.

பயிர் பாதுகாப்பு

பூச்சி தாக்குதல்

பூச்சி தாக்குதல் காணப்பட்டால் டைமித்தோயேட் 0.1 சதவீத கரைசலைத் தெளித்து கட்டுப்படுத்த வேண்டும்.

தண்டுத்துளைப்பான்

தண்டுத்துளைப்பானை கட்டுப்படுத்த குளோரிபைரிபாஸ் 0.05 சதவீதக் கரைசலை பஞ்சில் நனைத்து ஒரு துணியில் கட்டி தண்டின் துளைகளில் வைத்துவிட வேண்டும். இதன் மூலம் தண்டு துளைப்பான்களைக் கட்டுப்படுத்தலாம்.

பழ ஈக்கள்

பழ ஈக்களைக் கட்டுப்படுத்த மாலத்தியான் 50 இசி அல்லது என்டோசல்பான் 35 இசி போன்ற மருந்துகளில் ஏதேனும் ஒன்றை ஒரு லிட்டர் நீரில் 2 மில்லி என்ற அளவில் கலந்து தெளிக்கவேண்டும். பாதிக்கப்பட்டு கீழே விழுந்த பழங்களை சேகரித்து அழிக்கவேண்டும்.

இலைச்சுருள் நோய்

இலைச்சுருள் நோய் காணப்பட்டால் ஜிரம் 0.2 சதம் அல்லது மீத்தைல் டெமட்டான் 25 இ.சி ஒரு லிட்டர் தண்ணீருக்கு 2 மில்லி என்ற அளவில் தெளித்துக் கட்டுப்படுத்தலாம்.

சாம்பல் நோய்

சாம்பல் நோயை சல்பர் ஒரு லிட்டர் நீருக்கு 3 கிராம் என்ற அளவில் தெளித்து இந்நோயைக் கட்டுப்படுத்தலாம்.

அறுவடை

நன்கு திரண்ட பழங்களை அறுவடை செய்ய வேண்டும்.

மகசூல்

மரம் ஒன்று ஆண்டொன்றிற்கு 10 கிலோ முதல் 15 கிலோ பழங்கள் கொடுக்கவல்லது.

பயன்கள்
  • பீச் பழங்களை உட்கொள்வதால் தொற்று நோய்கள், இதயநோய்கள் ஆகியவற்றை குணபடுத்தி இரத்த ஓட்டத்தில் உள்ள கொழுப்பின் அளவை கட்டுபாட்டுக்குள் வைத்துக்கொள்கிறது.
  • பீச்பழங்களை உட்கொள்வதால் நரம்பு மண்டலம் மூலமாக நரம்பின் செல்களை பாதுகாக்கிறது மேலும் சீறுநீரகத்தில் உருவாகும் கல் மற்றும் கட்டிகளை பீச்பழம் சாப்பிடுவதால் தடுக்க முடியும்.
  • பீச் பழத்தில் வைட்டமின் ஏ, சி அதிகமுள்ளதால் இந்தப் பழத்தை முகத்தில் பூசினால் சரும சுருக்கங்கள் நீங்குவதோடு சரும துளைகளில் உள்ள அடைப்புகள் நீங்கி சுத்தமாகவும், முகம் பொலிவுடனும் இருக்கும்.
  • பீச் பழத்தில் வைட்டமின் பி6 இருப்பதால் கர்ப்பிணிகள் சாப்பிடவேண்டிய பழங்களில் முக்கியமான ஒன்றாக இது உள்ளது.
  • கோடையில் வெளியில் சென்று களைப்புடன் வருபவர்கள் பீச்பழத்தினை சாப்பிடலாம். ஏனெனில் இதில் நீர்ச்சத்து அதிகம் கொண்ட பீட்டா கரோட்டின் இருப்பதால் உடல் வறட்சியை போக்குகிறது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow