திருக்குறள் - குறள் 507
- குறள் பால்:
- பொருட்பால்
- குறள் இயல்:
- அரசியல்
- அதிகாரம்:
- தெரிந்துதெளிதல்
காதன்மை கந்தா அறிவறியார்த் தேறுதல்
பேதைமை எல்லாந் தரும்.
திருக்குறள் - குறள் 507 உரை
கலைஞர் மு.கருணாநிதி உரை
அறிவில்லாதவரை அன்பு காரணமாகத் தேர்வு செய்வது அறியாமை மட்டுமல்ல; அதனால் பயனற்ற செயல்களே விளையும்.
மு.வரதராசனார் உரை
அறியவேண்டியவற்றை அறியாதிருப்பவரை அன்புடைமை காரணமாக நம்பித்தெளிதல், (தெளிந்தவர்க்கு) எல்லா அறியாமையும் கெடும்.
சாலமன் பாப்பையா உரை
அறியவேண்டியவற்றை அறியாதவர்களை அவர்கள் மீதுள்ள அன்பு காரணமாகப் பதவியில் அமர்த்துவது அறியாமை பலவற்றையும் தரும்.
பரிமேலழகர் உரை
காதன்மை கந்தா அறிவு அறியார்த் தேறுதல் - அன்பு உடைமை பற்றுக்கோடாகத் தமக்கு அறியவேண்டுவன அறியாதாரைத் தெளிதல், பேதைமை எல்லாம் தரும் - அரசனுக்கு எல்லா அறியாமையும் கொடுக்கும்
(தன்னோடு அவரிடை நின்ற அன்புபற்றி அரசன் அறிவிலார் மேல் வினையை வைப்பின், அஃது அவர் அறிவின்மையாற் கெடும், கெட்டால் அவர்க்கு உளதேயன்றி வினைக்கு உரியாரை அறியாமை, மேல் விளைவு அறியாமை முதலாக அவனுக்கு அறியாமை பலவும் உளவாம் என்பதாம்.).
மணக்குடவர் உரை
அன்புடைமையே பற்றாக, அறிவுடையாரல்லாதாரைத் தேறுதல் எல்லா அறியாமையும் தரும். அரசர் அன்புடையாரைத் தேறலாமென்பது பராசரர் மதம். இஃது இவ்வளவினால் தேறலாகாதென்றது.
Translation
By fond affection led who trusts in men of unwise soul,
Yields all his being up to folly's blind control.
Explanation
To choose ignorant men, through partiality, is the height of folly.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this kural.
✍ மதிப்பிடுங்கள் · Rate and review
அதிகாரம் 51: தெரிந்துதெளிதல்
குறள் 501 அறம்பொருள் இன்பம் உயிரச்சம் நான்கின் திறந்தெரிந்து தேறப் படும்.
குறள் 502 குடிப்பிறந்து குற்றத்தின் நீங்கி வடுப்பரியும் நாணுடையான் சுட்டே தெளிவு.
குறள் 503 அரியகற்று ஆசற்றார் கண்ணும் தெரியுங்கால் இன்மை அரிதே வெளிறு.
குறள் 504 குணம்நாடிக் குற்றமும் நாடி அவற்றுள் மிகைநாடி மிக்க கொளல்.
குறள் 505 பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம் கருமமே கட்டளைக் கல்.
குறள் 506 அற்றாரைத் தேறுதல் ஓம்புக மற்றவர் பற்றிலர் நாணார் பழி.
குறள் 508 தேரான் பிறனைத் தெளிந்தான் வழிமுறை தீரா இடும்பை தரும்.
குறள் 509 தேறற்க யாரையும் தேராது தேர்ந்தபின் தேறுக தேறும் பொருள்.
குறள் 510 தேரான் தெளிவும் தெளிந்தான்கண் ஐயுறவும் தீரா இடும்பை தரும்.