திருக்குறள் - குறள் 144
குறள் பால்: அறத்துப்பால். குறள் இயல்: இல்லறவியல். அதிகாரம்: பிறனில் விழையாமை.
திருக்குறள் - குறள் 144
எனைத்துணையர் ஆயினும் என்னாம் தினைத்துணையும்
தேரான் பிறனில் புகல்.
கலைஞர் மு.கருணாநிதி உரை:
பிழை புரிகிறோம் என்பதைத் தினையளவுகூடச் சிந்தித்துப் பாராமல், பிறன் மனைவியிடம் விருப்பம் கொள்வது, எத்துணைப் பெருமையுடையவரையும் மதிப்பிழக்கச் செய்துவிடும்.
மு.வரதராசனார் உரை:
தினையளவும் ஆராய்ந்து பார்க்காமல் பிறனுடைய மனைவியிடம் செல்லுதல், எவ்வளவு பெருமையை உடையவராயினும் என்னவாக முடியும்?.
சாலமன் பாப்பையா உரை:
அடுத்தவன் மனைவியை விரும்பித் தன் பிழையைச் சிறிதும் எணணாமல் அவ்வீட்டில் நுழைபவன் எத்தனைப் பெருமை உடையவனாய் இருந்துதான் என்ன?.
பரிமேலழகர் உரை:
எனைத்துணையர் ஆயினும் என்னாம் - எத்துணைப் பெருமையுடையார் ஆயினும் ஒருவர்க்கு யாதாய் முடியும், தினைத்துணையும் தேரான் பிறன் இல் புகழ் - காம மயக்கத்தால் தினையளவும் தம் பிழையை ஓராது பிறனுடைய இல்லின்கண் புகுதல். (இந்திரன் போல எல்லாப் பெருமையும் இழந்து சிறுமை எய்
மணக்குடவர் உரை:
எல்லாவமைதியினையும் உடையவராயினும், தினையளவுந் தேராது பிறனுடைய இல்லிலே புகுதல் யாதாய்ப் பயக்குமோ?. பிறனில் விழைவால் வருங் குற்றங் கூறுவார் முற்பட வெல்லாக் குணமுமிழியுமென்று கூறினார்.
திருக்குறளார் வீ. முனிசாமி உரை:
தினையளவும் தமது குற்றத்தினைக் காம மயக்கத்தினால் நினையாமல் பிறன் இல்லத்தில் புகுவோர் எவ்வளவு பெருமையுடையவராக இருந்தாலும் என்ன? யாதொரு பயனுமில்லை.
Translation:
How great soe'er they be, what gain have they of life,
Who, not a whit reflecting, seek a neighbor's wife.
Explanation:
However great one may be, what does it avail if, without at all considering his guilt, he goes unto the wife of another?.
திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்