திருக்குறள் - குறள் 11
- குறள் பால்:
- அறத்துப்பால்
- குறள் இயல்:
- பாயிரவியல்
- அதிகாரம்:
- வான்சிறப்பு
வான்நின்று உலகம் வழங்கி வருதலால்
தான்அமிழ்தம் என்றுணரற் பாற்று.
திருக்குறள் - குறள் 11 உரை
கலைஞர் மு.கருணாநிதி உரை
உலகத்தை வாழ வைப்பது மழையாக அமைந்திருப்பதால் அதுவே அமிழ்தம் எனப்படுகிறது.
மு.வரதராசனார் உரை
மழை பெய்ய உலகம் வாழ்ந்து வருவதால், மழையானது உலகத்து வாழும் உயிர்களுக்கு அமிழ்தம் என்று உணரத்தக்கதாகும்.
சாலமன் பாப்பையா உரை
உரிய காலத்தில் இடைவிடாது மழை பெய்வதால்தான் உலகம் நிலைபெற்று வருகிறது; அதனால் மழையே அமிழ்தம் எனலாம்.
பரிமேலழகர் உரை
[அஃதாவது ,அக்கடவுளது ஆணையான் உலகமும், அதற்கு உறுதியாகிய அறம் பொருள் இன்பங்களும் நடத்தற்கு ஏதுவாகிய மழையினது சிறப்புக் கூறுதல். அதிகார முறைமையும் இதனானே விளங்கும்.]
வான்நின்று உலகம் வழங்கி வருதலால் - மழை இடையறாது நிற்ப உலகம் நிலைபெற்று வருதலான்; தான் அமிழ்தம் என்று உணரற்பாற்று - அம்மழை தான் உலகிற்கு அமிழ்தம் என்று உணரும் பான்மையை உடைத்து. ('நிற்ப' என்பது 'நின்று' எனத் திரிந்து நின்றது. 'உலகம்' என்றது ஈண்டு உயிர்களை.
மணக்குடவர் உரை
மழைவளம் நிலை நிற்றலானே உலகநடை தப்பாது வருதலான், அம்மழைதான் உலகத்தார் அமுதமென்றுணரும் பகுதியது. இஃது அறம் பொரு ளின்பங்களை யுண்டாக்குதலானும், பலவகைப்பட்ட வுணவுகளை நிலை நிறுத்தலானும். இம்மழையினை மற்றுள்ள பூத மாத்திரமாக நினைக்கப் படாதென்ற நிலைமை கூறிற்று.
திருக்குறளார் வீ. முனிசாமி உரை
மழை இடைவிடாமல் பெய்வதால் உலகிலுள்ள உஉயிர்கள் நிலைபெற்று வருகின்றன. ஆதலால், மழையே அமிழ்தம் என்று அறியப்படும் தன்மை உடையதாகும்.
Translation
The world its course maintains through life that rain unfailing gives;
Thus rain is known the true ambrosial food of all that lives.
Explanation
By the continuance of rain the world is preserved in existence; it is therefore worthy to be called ambrosia.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this kural.
✍ மதிப்பிடுங்கள் · Rate and review
அதிகாரம் 2: வான்சிறப்பு
குறள் 12 துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத் துப்பாய தூஉம் மழை.
குறள் 13 விண்இன்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்து உள்நின்று உடற்றும் பசி.
குறள் 14 ஏரின் உழாஅர் உழவர் புயல்என்னும் வாரி வளங்குன்றிக் கால்.
குறள் 15 கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய்மற் றாங்கே எடுப்பதூஉம் எல்லாம் மழை.
குறள் 16 விசும்பின் துளிவீழின் அல்லால்மற் றாங்கே பசும்புல் தலைகாண்பு அரிது.
குறள் 17 நெடுங்கடலும் தன்நீர்மை குன்றும் தடிந்தெழிலி தான்நல்கா தாகி விடின்.
குறள் 18 சிறப்பொடு பூசனை செல்லாது வானம் வறக்குமேல் வானோர்க்கும் ஈண்டு.
குறள் 19 தானம் தவம்இரண்டும் தங்கா வியன்உலகம் வானம் வழங்கா தெனின்.
குறள் 20 நீர்இன்று அமையாது உலகெனின் யார்யார்க்கும் வான்இன்று அமையாது ஒழுக்கு.