சித்தர்களின் சித்துவிளையாட்டுகள்

சித்தர்களின் சித்துவிளையாட்டுகள்

 0  482
சித்தர்களின் சித்துவிளையாட்டுகள்

சித்தர்களின் சித்துவிளையாட்டுகள் –சித்தர்கள் என்றால் அறிவு நிறைந்தவர்கள் என்று பொருள். சித்திகள் என்ற மனித அறிவுக்கு எட்டாத பல காரியங்களில் ஈடுபடுபவர்கள். இந்த சித்திகளில் எட்டு பெரும் சித்திகள் உள்ளன. இதை அட்டமா சித்திகள் என கூறுகின்றார்கள். அவைகளை அறிந்து கொண்டு தேர்ச்சி பெற்றவர்கள் சித்தர்கள்.

அட்டாங்க யோகங்கள்  இயமம் - கொல்லாமை, வாய்மை, கள்ளாமை, வெஃகாமை (பிறர் பொருள் விரும்பாமை) புலன் அடக்கம் என்பனவாம்.


 
நியமம் - தவம், மனத்தூய்மை, தத்துவ நூலோர்தல், பெற்றது கொண்டு மகிழ்தல், தெய்வம் வழிபடல்.

ஆதனம் - பத்திரம், கோமுகம், பங்கயம் , கேசரி, சுவத்திகம் (மங்கலம்), சுகாதானம் (சுகமும்,திடமும் எவ்வாறிருக்கின் எய்துமோ அவ்வாறிருத்தல்), வீரம், மயூரம் முதலிய இருப்பினுள் ஒன்றாயிருத்தல்.

பிராணாயாமம் - பிராண வாயுவைத் தடுத்தல், வாயுவை உட்செலுத்துதல், வெளிச்செலுத்துதல், இரேசக,பூரக கும்பங்களால் தடுத்தல் (இரேசகம் என்பது மூச்சை வெளிவிடுதல், பூரகம் என்பது வாயுவை உட்செலுத்துதல்). இதுவும் இரண்டு வகைப்படும்.1- அகற்பம் - மந்திரமில்லாது நிறுத்தல். 2- சகற்பம் - பிரணவத்துடன் காயத்திரி மந்திரத்தை, உச்சரித்து நிறுத்தல்.

பிராத்தியாகாரம் - மனமானது, புலன்கள் வாயிலாக விஷயாதிகளில் சென்று பற்றி உழலாவண்ணம் அடக்குதல்.

தாரணை - உந்தி,இதயம்,உச்சி என்னும் மூன்றிடத்தும் உள்ளத்தை நிலைநிறுத்தல்; இதற்கு 'முழங்கால்,குதம், இதயம்,கண்டம்,கபாலம்' என்னும் ஜந்து இடங்களிலும் ஜம்பூதங்களை (நிலம், நீர், தீ, காற்று, வானம்) ஆகியவைகளையும் ஒடுக்கி அவ்விடங்களில் முறையே பிரம்மன், விஷ்ணு, உருத்திரன், மகேசுரன், சதாசிவன் என்னும் பஞ்ச மூர்த்திகளையும் இருத்திப்பாவித்தல் எனவும் கூறுவர். தியானம் - ஜம்புலத்தையும், அந்தக்கரணத்தையும் அடக்கி, ஒரு கரத்து மழுவும் ஒருகரத்துமானும் ஏந்தியதாய், அபயவரத அத்தங்களையுடையனவாய் சதுர்ப்புயம்,காளகண்டம்,திரிநேத்திரம் உடையனவாய் விளங்கும் சிவமூர்த்தியைத் தியானித்தலாம். சமாதி - ஓரிடத்தேனும் மந்திரத்தோடு நோக்காமல் எங்கணும் சிவவியாபகமாய், நோக்கி, அவ்வஸ்துவையும், தன்னையும் பிரிவறப் பொருத்துதல். இத்தகு அட்டாங்க யோகத்தினால் அட்டமா சித்திகளை அடைந்தவர்களே சித்தர்கள்ஆவார்கள்.


 
அட்டமா சித்தி என்று மரபாகக் கருதப்படும் எட்டுத் திறமைகளை அடைந்தவர்கள் சித்தர்கள் ஆவர். இவை இயற்கை அளித்த திறமைகள் எனவும் அற்புதத் தன்மை உடையன என்றும் கருதப்படுகின்றன. இவ்வாறான அட்டமா சித்திகளைச் சித்தர்கள் அட்டாங்க யோகப் பயிற்சியினால் பெற்றனர்.

1. அணிமா – அணுவைக் காட்டிலும் சிறியதாக வடிவெடுத்தல்.

2. மகிமா – மலையை விட பெரிய வடிவெடுத்தல்.

3. கரிமா – மெல்லிய வடிவாக இருத்தலும், கைகளால் தூக்க இயலாத அளவிற்கு கனமாக இருத்தலும், நுகர்ச்சியின் தொடக்குகள் பற்றாமல் இருப்பதுவுமான ஆற்றல். 4. இலகிமா – காற்றை விட மெல்லிய வடிவெடுதல்.

5. பிராப்தி – நினைத்த பொருளை, நினைத்த நேரத்திலே பெரும் ஆற்றல்.

6. பிராகாமியம் – பல பல வடிவங்களை எடுத்தலுக்கும், அளவுக்கதிகமான வலிமை அல்லது ஆற்றல் உள்ளமைக்கும் இப்படி பெயர்.


 
7. ஈசாத்துவம் – தேவர்கள் முதல் சிறு உயிர்கள் வரை தன்னை வணங்கி வழிபடும் நிலை.

8. வசித்துவம் – தன்னை கண்டவர் அனைவரையும் தன் வயப்படுத்துவதும், கோள்களையும், மீன்களையும் தன் வசம் செய்வதுமான ஆற்றல். வசியம் என அனைவராலும் அறியப்பட்டுள்ளது. இதைவிட சிறந்த பல்வேறான சித்திகள் இருக்கின்றன. அதில் ஒன்றுதான் கூடுவிட்டு கூடுபாயும் நிலை. சித்தர்கள் இந்த அட்டமா சித்திகளில் வல்லவர்களாக இருந்திருக்கிறார்கள். அதற்கு ஆதாரங்களும் இருக்கின்றன. அந்தஆதாரங்கள் சித்தர்களின் தனிப்பட்ட வாழ்கைகளைகளை விவரிக்கும் போது உங்களுக்கு சமர்ப்பிக்கிறேன். சித்தர்களின் மதம் –எல்லா மதங்களிலும் ஞானிகள் இருக்கிறார்கள். இஸ்லாமிய மதத்தில் அவர்களுக்கு சூப்பிக்கள் என்று பெயர், பௌத மதத்தில் அவர்களுக்கு ஜென் ஞானிகள் என்று பெயர். நம் மதத்தில் சித்தர்கள். ஞானிகளுக்கும் சித்தர்களுக்கும் ஒரு வேறுபாடு இருக்கிறது, அது என்னவென்றால் ஞானிகள்அறிவில் சிறந்தவர்களாக இருப்பார்கள், சித்தர்கள் ஞானத்தில் சிறந்தவர்களாகவும், சித்திகளில் வல்லவர்களாகவும் இருப்பார்கள். மற்றமதங்களில் இறை தூதர்களுக்கு மட்டுமே சித்திகள் தெரிந்திருக்கின்றன.சித்தர்கள் நம் இந்துமத்த்தினை சார்ந்தவர்கள். அதற்காக தற்போது கோவில்களில் வேதமந்திரங்கள் சொல்லி சிலைகளுக்கு அபிசேகம் செய்யும் பிராமணர்கள் போல எண்ணிவிடாதீர்கள். இவர்கள் முற்றிலும் மாறுபட்டவர்கள் சீவனே சிவம் என உணர்ந்து, அதையே மக்களுக்கு போதித்தவர்கள். இதனால் சித்தர்களை ஏற்காத பல மதவாதிகளும்உண்டு.இயற்கையான இயல்புகளை உடைத்தெறியக் கூடியவர்களாக மட்டுமல்லது மனதினை மட்டுமே கடவுளாக போற்றுகின்ற சித்தர்களும் உண்டு. ஆன்மீகத்தில் தன்னையே கடவுளென போதிக்கும் வகையிலும் சிலர் வருகின்றார்கள். மனதினை அடக்கி ஆளும் வகையிலே யோகிகளாகவும், பல துறைகளில் சிறந்து விளங்கும் ஞானிகளாகவும் இருந்திருக்கின்றனர். இப்படி பல்வேறுபட்ட கருத்துகளை சித்தர்கள் பாடல்கள் நமக்கு சொல்லுகின்றன. குறிப்பாக நான்கு வழிகள்.


 
1. சாலோகம் – இறைவன்  இடத்தில் இருக்கும் நிலை. பூவுலகம் விட்டுப்போனபின் தேவர் உலகத்தில்  வாழ்வதை சாலோகம் என்பர்.

2. சாமீபம் – இறைவனை நெருங்கியிருக்கும் நிலை.கடவுளின் அருகே இருப்பதை சாமீபம் என்பார்கள். 

3. சாரூபம் – இறைவனை உருப்பெற்று விளங்கும் பேறு. கடவுளின் உருவினைப் பெற்று வாழ்வதை சாரூபம் என்றும்; 

4. சாயுச்சியம் – இறைவனுடன் இரண்டறக் கலத்தல் நிலை.கடவுளோடு இரண்டறக்கலந்து வாழ்வதை சாயுஜ்ஜியம் என்றும் சொல்வர்.

அடியா ரானீர் எல்லீரும்

அகல விடுமின் விளையாட்டைக்

கடிசே ரடியே வந்தடைந்து

கடைக்கொண் டிருமின் திருக்குறிப்பைச்

செடிசேர் உடலைச் செலநீக்கிச்

சிவலோ கத்தே நமைவைப்பான்

பொடிச்சேர் மேனிப் புயங்கன்தன்

பூவார் கழற்கே புகவிடுமே.  - யாத்திரைப் பத்து

பதப்பொருள் : அடியார் ஆனிர் எல்லீரும் - அடியாராகிய நீங்கள் எல்லீரும், விளையாட்டை - உலக இன்பங்களில் ஈடுபட்டுப் பொழுது போக்குகின்ற நிலையை, அகல விடுமின் - நீங்கிப் போமாறு விட்டு ஒழியுங்கள்; கடிசேர் அடியே - மணம் தங்கிய திருவடியையே, வந்து அடைந்து - வந்து பொருந்தி, திருக்குறிப்பை - திருவுள்ளக் குறிப்பை, கடைக்கொண்டு இருமின் - உறுதியாகப் பற்றிக்கொண்டிருங்கள்; பொடி சேர் மேனி - திருவெண்ணீறு பூசப்பெற்ற திருமேனியையுடைய, புயங்கன் - பாம்பணிந்த பெருமான், செடி சேர் உடலை - குற்றம் பொருந்திய உடம்பை, செல நீக்கி - போகும்படி நீக்கி, சிவலோகத்தே - சிவபுரத்தே, நமைவைப்பான் - நம்மை வைப்பான், தன் பூ ஆர் கழற்கே - தனது தாமரை மலர் போன்ற திருவடி நிழலிலே, புகவிடும் - புகும்படி செய்வான்.

விளக்கம் : முத்தி நால்வகை; சாலோகம் சாமீபம் சாரூபம் சாயுச்சியம் என்பன. சிவலோகத்தே வைத்தல், சாலோக பதவியளித்தல். பூவார் கழற்கே புகவிடுதல், சாயுச்சிய பதவியளித்தலாம். சாயுச்சிய பதவி பெற்றோர்க்கு மீண்டும் பிறவி இல்லை என்க. பிறவி வேண்டாதவர் உலகப் போகங்களில் மனத்தைச் செலுத்தாது இறைவன் திருவுள்ளக் குறிப்பின்வண்ணம் நடந்தால் மீண்டு வாரா வழியாகிய சாயுச்சிய பதவி கிட்டும் என்பதாம். இதனால், இறைவன் தன் அடியார்க்குப் பரமுத்தியை நல்குவான் என்பது கூறப்பட்டது.
நன்றி-சித்தர் உலகம்

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow