முறுக்கு செய்வது எப்படி?

முறுக்கு செய்வது எப்படி?

தேவையான பொருட்கள் 

பச்சரிசி - 5 1/2 கப் (1 கிலோ)
உளுந்து - 200 கிராம்
கடலை பருப்பு - ஒரு மேசைக்கரண்டி
உப்பு - ஒரு தேக்கரண்டி
எள்ளு - ஒரு தேக்கரண்டி
பெருங்காயம் - சுண்டைக்காய் அளவு
எண்ணெய் - பொரிப்பதற்கு

செய்முறை 

அரிசியை தண்ணீரில் களைந்து, ஒரு சுத்தமான துணியில் அரை நாள் வரை உலர விட்டு எடுக்கவும். உளுந்தையும், கடலைப் பருப்பையும் தனித்தனியே வாணலியில் போட்டு சிவக்க வறுத்து எடுக்கவும்.

நன்கு காய்ந்த அரிசியுடன் உளுந்து, கடலைப்பருப்பு சேர்த்து மெஷினில் கொடுத்து அரைத்து எடுத்துக் கொள்ளவும்.

பெருங்காயத்தை 2 மேசைக்கரண்டி தண்ணீரில் ஊற வைக்கவும். ஒரு பாத்திரத்தில் அரைத்து வைத்திருக்கும் மாவில் இரண்டு கப் அளவு மாவை எடுத்துக் கொள்ளவும். அதனுடன் உப்பு மற்றும் எள்ளு சேர்த்து கலந்துக் கொள்ளவும்.

அதன் பிறகு பெருங்காயத் தண்ணீரை ஊற்றி பிசையவும். பிறகு சிறிது சிறிதாக தண்ணீரை தெளித்து மாவு கெட்டியாக மிருதுவான பதம் வரும் வரை பிசையவும்.

முறுக்கு பிழியும் உரலில் விருப்பமான முறுக்கு அச்சை போட்டு மாவை உரல் கொள்ளும் அளவிற்கு வைத்து மூடவும். சில்வர் சாரணி அல்லது சில்வர் தட்டுகளில் முறுக்கை பிழிந்து வைக்கவும்.

வாணலியில் எண்ணெயைக் காயவிட்டு, பிழிந்து வைத்திருக்கும் முறுக்கை ஒன்றிரண்டாகப் வேகவிடவும். சிறிது நேரம் கழித்து திருப்பி விடவும்.

எண்ணெயின் சலசலப்பு அடங்கியதும் முறுக்கு லேசாக சிவந்ததும் எண்ணெயை வடித்து எடுக்கவும். இதுப் போல எல்லா மாவிலும் செய்யவும். சுவையான மொறுமொறுப்பான தீபாவளி முறுக்கு தயார்.