இயக்குனர் சிவாவுடன் இணைந்த சூர்யா.. பிப்ரவரியில் தொடங்கும் படப்பிடிப்பு.

இயக்குனர் சிவாவுடன்  இணைந்த சூர்யா.. பிப்ரவரியில் தொடங்கும் படப்பிடிப்பு.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் சூர்யா தற்போது கைவசம் ஏகப்பட்ட படங்களை வைத்துள்ளார். அந்த வரிசையில் இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகி உள்ள எதற்கும் துணிந்தவன் படம் முடிவடைந்து வெளியீட்டுக்கு தயாராக உள்ளது. இது தவிர சூர்யா நடிப்பில் ஜெய்பீம் என்ற படமும் தயார் நிலையில் உள்ளது.

மேலும், இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல், இன்று நேற்று நாளை பட இயக்குனர் ரவிக்குமார் இயக்கத்தில் ஒரு படம், இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் ஒரு படம் என மிகவும் பிசியாக வலம் வந்து கொண்டிருக்கிறார். மற்றொரு புறம் அவரது 2டி எண்டர்டெயின்மென்ட் தயாரிப்பு நிறுவனம் மூலம் படங்களையும் தயாரித்து வருகிறார்.

இந்நிலையில் மேலும் ஒரு புதிய படத்தில் நடிக்க சூர்யா ஒப்பந்தமாகி உள்ளாராம். சூர்யாவின் தம்பியான கார்த்தியை வைத்து சிறுத்தை படத்தை இயக்கிய இயக்குனர் சிவா இயக்கும் புதிய படத்தில் தான் தற்போது சூர்யா கதாநாயகனாக நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார்.

இயக்குனர் சிவா தமிழில் சிறுத்தை, வீரம், வேதாளம், விஸ்வாசம் உள்ளிட்ட வெற்றி படங்களை வழங்கியவர். அஜித் நடிப்பில் வெளியான விஸ்வாசம் படத்தை தொடர்ந்து சூர்யா நடிப்பில் புதிய படத்தை இயக்க ஒப்பந்தமானார். ஆனால், அந்த சமயத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினியை வைத்து அண்ணாத்த படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்ததால் சூர்யா படம் தள்ளிசென்றது.

தற்போது அண்ணாத்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் முழுமையாக முடிவடைந்து இறுதிக்கட்டத்தில் உள்ளன. மேலும் படமும் வரும் தீபாவளி அன்று வெளியாக உள்ளது. எனவே சிவா விரைவில் சூர்யா படத்திற்கான வேலைகளை தொடங்கவுள்ளார். மேலும் பிப்ரவரி மாதம் படப்பிடிப்பு தொடங்க உள்ளது எனவும் தகவல் வெளியாகி உள்ளது. இப்படத்தை ஸ்டுடியோ கிரீன் தயாரிக்க உள்ளதாம்.